தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்கள் பிப். 6-ம் தேதி (இன்று) முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வரும் பிப்ரவரி 12-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

தேமுதிகவின் நிர்வாகிகள் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் எவரும் இந்தத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இதில் பொது தொகுதிக்கு ரூ.15 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி இழுபறி நீடிப்பு: சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக, திமுக ஆகிய இரு தரப்பினரும் தேமுதிகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தேமுதிக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன.

அதேநேரம் அதிமுக, திமுக என இரு கட்சிகளும் 6 முதல் 8 தொகுதிகள் வரையே ஒதுக்க முன்வருவதால் கூட்டணி நிலைப்பாட்டில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழலில் விருப்ப மனு வாங்குவதற்கான அறிவிப்பை தேமுதிக தலைமை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *