மதுரை;
பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.
தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், கூட்டணி அமைப்பது குறித்தபேச்சுவார்த்தைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் உருவாகியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் முக்கிய அங்கங்களாக இடம்பெற்றுள்ளன.
தேர்தல்நெருங்கும் சூழலில், மேலும் சில கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் கடந்த ஜனவரி 23-ம் தேதி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி, என்டிஏ-வின் தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி, தமிழகத்தில் “இரட்டை இன்ஜின் ஆட்சி” அமைய வேண்டிய அவசியம் குறித்து பேசியது, மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் “டப்பா இன்ஜின்” என விமர்சனத்தை முன்வைத்தார். தவெகதலைவர் விஜய்யும் “டாப் இன்ஜின்” என கருத்து தெரிவித்து, இந்த விவாதத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் மோதல்கள் தீவிரமாகி வரும் நிலையில், வரும் பிப்ரவரி 28-ம்தேதி மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் அணிவகுக்க உள்ளனர்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணையும் வாய்ப்பு உள்ள சில கட்சிகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் மதுரை வருகையின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
சமீபத்தில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டுமாதங்களே உள்ள நிலையில், தென் தமிழகத்தின் அரசியல் மையமாக விளங்கும் மதுரையில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டம், தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் முக்கிய திருப்புமுனையாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.