மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியது எனக்குப் புரியவில்லை; ஏற்கெனவே அவர் பேச்சு புரியாததால்தான் கோவை மக்கள் தோற்கடித்தனர்- வானதி சீனிவாசன் கிண்டல்!!

கோவை;
‘‘மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேசியது எனக்குப் புரியவில்லை. ஏற்கெனவே அவர் பேச்சு புரியாததால்தான் கோவை மக்கள் தோற்கடித்தனர்’’ என பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ தெரிவித்தார்.

கோவை கணபதி ஓம்சக்தி நகரில் ‘உங்கள் குரல் எங்கள் செயல்’ என்ற அலைபேசி செயலி மூலம் மக்களின் கருத்துகளையும், பிரச்சினைகளையும் அறிந்துகொள்ளும் திட்டம் பாஜக சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக இந்த திட்டத்தை தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதில் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சங்கனூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மோடி முகாம் நிகழ்வை இருவரும் தொடங்கி வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களுக்கும், மக்களுக்கும் ஒரு கனவு இருக்கிறது.

மக்களுக்கு எதிரான திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் அந்தக் கனவு. வரும் தேர்தலில் அந்தக் கனவை தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்றுவார்கள்.

நான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவெடுத்து தலைமை அறிவிக்கும். தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக அரசின் மானிய விலையில் இருசக்கர வாகனத் திட்டம், தாலிக்கு தங்கம், மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை நிறுத்திவிட்டார்கள்.

மாநிலங்களவையில் கமல்ஹாசன் என்னென்னமோ பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி கிண்டல் செய்யப்படுவதாக சொல்கின்றனர். கமல் பேச்சு எனக்கு புரியவே இல்லை.

அவர் பேச்சு புரிந்தால் எனக்கு சொல்லுங்கள். ஏற்கெனவே கோவையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டபோது அவர் பேச்சு புரியாததால்தான் மக்கள் அவரைத் தோற்கடித்து இங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர் எதற்காக நிறுத்தப்பட்டாரோ அந்த முதலாளிகள் அவரை இப்போது டெல்லிக்கு அனுப்பி இருக்கின்றனர். அவர்களுக்காவது கமல் நியாயம் செய்யக் கூடாதா?

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி, அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் சுற்றுப் பயணத்தை மட்டும் மாற்றித் தரும்படி கூறி உள்ளார்.

சட்டப் பேரவைக்குள் அண்ணாமலை வரவேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பம். இதனை வேண்டுமென்றே பூதாகரமாக மாற்றுகின்றனர். செங்கோட்டையன் முதிர்ந்த அரசியல்வாதி.

ஆனால் காலத்தின் கொடுமையால் அவர், இப்போது கட்சி ஆரம்பித்துள்ள நடிகரோடு சேர்ந்து நிற்கிறார் என்பதை பார்க்க எங்களுக்கு வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சியின் குறியீடு. திமுக கூட்டணி ஊழலின் குறியீடு. செந்தில்பாலாஜி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் ஜெயில் டு பெயில் மற்றும் பெயில் டு ஜெயில் ஆக உள்ளனர்.

1 சதவீதம் கூட ஊழலற்ற அரசை மோடி நடத்தி வருகிறார். உலகின் 4-வது வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை மோடி உயர்த்தி உள்ளார்.

இளைஞர்கள், பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் என அனைவருக்குமான அரசாக மோடி அரசு உள்ளது.

திமுக ஆட்சி குடும்ப ஆட்சி. ஊழல் ஆட்சி ஆகும். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

இரட்டை இலையும், தாமரையும் அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *