புதுடெல்லி:
தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி அன்புமணி தலைவராக உள்ளார். உரிமை கோருவோர் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு பாமக வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

பாமக.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்சியினர் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையத்தை இருவரும் அணுகினர். இதில், தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி பாமக.வின் தலைவராக அன்புமணி இருக்கிறார். அவரது பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ளது என்ற பதில் கடிதத்தை தேர்தல் ஆணையம் அனுப்பியது.
அதன்படி, பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் அவருக்குத்தான் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தை அணுகி மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்பினர் பெற்றனர்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி மினி புஷ்கர்னா கடந்த டிச.4-ம் தேதி விசாரித்தார்.
அவர் பிறப்பித்த உத்தரவில், பாமகவின் தலைவராக அன்புமணி யையோ, ராமதாஸையோ அங்கீகரிக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் வாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரமற்ற அரசியல் கட்சிக்குள் எழும் உள்கட்சி பூசலுக்கு தீர்வுகாண தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை.
அங்கீகாரமற்ற அரசியல் கட்சியின் எந்தவொரு கோஷ்டியையும், அந்த கோஷ்டியின் கோரிக்கையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவோ, நிராகரிக்கவோ கூடாது என்று குறிப்பிட்டு மனுவை முடித்து வைத்தது.
இதனிடையே தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில், இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாசையோ ராமதாசையோ கட்சியின் தலைவராக அங்கீகரிக்கவில்லை என்ற தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை உத்தரவில் பதிவு செய்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் வாதத்துக்கும், உத்தரவில் பதிவு செய்ததற்கும் முரண்பாடு உள்ளதால் உத்தரவில் பத்திகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங் ஆட்சேபம் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. அனைத்து விளக்கங்களையும் தேர்தல் ஆணையத்திடம் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் வாதத்தின்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும்போது நிர்வாகிகளின் பெயர்களும், நிர்வாகிகளும் மாற்றப்படும் போது அதுகுறித்த கடிதமும் தகவலுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
அதை தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்து பதிவு செய்து கொள்ளும். ஒரு கட்சியில் உள்கட்சி பூசல் வரும்போது ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் ஆணையம் செயல்படும் என்ற வாதத்தை பதிவு செய்து கொண்டு இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது.
மற்ற பிரச்சினைகளை சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டு வழக்கு முடித்து வைத்துள்ளது.