கூட்டணி ஒப்பந்தம் அனைவரும் பாராட்டும் வகையில், காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிக்கப்பட்டது – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தஞ்சாவூர்:
“கூட்டணி ஒப்பந்தம் அனைவரும் பாராட்டும் வகையில், காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிக்கப்பட்டது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் இன்று (மார்ச் 5) பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சகோதரி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் முக.ஸ்டாலின் பேசியதாவது: அன்பில் தர்மலிங்கத்துக்கும், தலைவர் கருணாநிதிக்கும் நல்ல நட்பு இருந்தது.

அதே போல் எனக்கும், பொய்யாமொழி நல்ல பக்கபலமாக இருந்தார். தற்போது உதயநிதிக்கும் மகேஸுக்கும் நல்ல நட்பு உள்ளது. இந்த நட்பு என்பது வாழையடி வாழையாக தொடர்கிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ளார்.

ஓர் அமைச்சர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பணியாற்றி வருகிறார்.

சட்டமன்றத்திலும், பிற விழாக்களிலும் புள்ளிவிரங்களோடு, கணினியை போன்று பேசக்கூடிய ஆற்றலை பெற்றவர். அவரைப் பார்த்து எல்லோரும் பாரட்டும்போது, அவரது தந்தை பொய்யாமொழி இருந்தால் எப்படி சந்தோஷம் அடைவாரோ அதே போல் நான் சந்தோஷமடைகிறேன்.

காங்கிரஸ் கட்சியுடன் நேற்று இரவு வெற்றிகரமாக பேசி ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. அதுவும் வெற்றிகரமாக அனைவரும் பாராட்டும் வகையில் முடித்துவிட்டு இத்திருமணத்துக்கு வந்துள்ளேன்.

இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும்போது, கையில் சைகையால் சொல்லிய காட்சி சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். அது திட்டமிட்டு செய்ததில்லை.

அங்கு எதிரே இருந்த பத்திரிகை நண்பர்கள் பார்த்து முடிந்துவிட்டதா எனக் கேட்டனர். அதற்கு முடிந்துவிட்டது எனக் கூறினேன் அவ்வளவுதான்.

அது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மாநிலங்களவை வேட்பாளர்களாக 2 பேரை திமுகவில் அறிவித்துள்ளோம்.

கூட்டணி கட்சிக்கு 2 இடங்களைக் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *