சென்னை:
பிரபல பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சுரா கவுண்டியில் அவர் மதுபோதையில் புதன்கிழமை இரவு வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவர் மே 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்னியின் மேலாளர் கேட் ஹட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது துரதிர்ஷ்டவசமான மற்றும் மன்னிக்க முடியாத சம்பவம். பிரிட்னி, சட்டத்துக்கு முழுமையாகக் கட்டுப்படுவார்.
அவரது வாழ்க்கையில் நீண்டகாலமாகத் தேவைப்படும் ஒரு மாற்றத்துக்கு இதுவே தொடக்கமாக அமையும் என்று நம்புகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் அவருக்குப் போதிய உதவியும் ஆதரவும் தேவை” என்று தெரிவித்துள்ளார்.