சென்னை:
திமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் நேர்காணலில் போடிநாயக்கனூர் தொகுதியில் சீட் கேட்டு ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 35 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க கூட்டணியை பலப்படுத்தும் வகையில் புதிய கட்சிகளை இணைத்து வருகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விட தற்போது 9 கட்சிகள் புதிதாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எனவே இந்த கட்சிகளுக்கும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுவும் பெற்றப்பட்டது. அந்த வகையில் 15,372 விருப்ப மனுவை வழங்கினார்கள்.
இதில் பெரும்பாலும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் திமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேற்று முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று (மார்ச் 17) புதுச்சேரி, காரைக்கால் ஆகிய தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று (மார்ச் 18) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி,மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் நடைபெறுகிறது.
நாளை மார்ச் 19ஆம் தேதி கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் வட மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக பல பிரிவுகளாக அதிமுக பிரிந்தது.
இந்த சூழலில் தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களம் இறங்கி ஓ.பன்னீர் செல்வம் சட்டப்போரட்டம் நடத்தினார்.
ஒரு கட்டத்தில் அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் திமுகவில் இணைந்துள்ளார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திமுக சார்பாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட ஓபிஎஸ் சார்பில் அவரது மகன் ரவிந்தீரநாத் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இன்று மதியம் தேனி மாவட்டத்திற்கான விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வம் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணலில் பங்கேற்கவுள்ளார்.
நேர்காணலில் பங்கேற்பவரி களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு தொடர்பாக தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் ஸ்டாலின், ஓபிஎஸ்யிடம் என்ன கேள்வி எழுப்புவார் என்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.