மும்பை:
இந்த மாதம் தொடங்கவுள்ள அனைத்து ஐபிஎல் ஆட்டங்களிலும் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஹர்ப்ரீத் பிரார் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் வலியுறுத்தி உள்ளார்.
2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் வரும் 28-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு நடைபெறவுள்ளது.
போட்டிக்காக 10 அணிகளும் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றன. வரும் 31-ம் தேதி நியூ சண்டிகரில் நடைபெறவுள்ள தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் விளையாடவுள்ளது.
இந்நிலையில் ஜியோ ஹாட்ஸ்டாருக்கு சஞ்சய் பங்கார் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர்.
அவர் இடதுகை, வலதுகை பேட்ஸ்மேன் என அனைத்து வீரர்களுக்கும் ஏற்ற வகையில் பந்துவீசி அவர்களை நிலைகுலையச் செய்யும் திறமை படைத்தவர். அசாத்தியமான சுழற்பந்து வீச்சாளர்.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக ஹர்பிரீத் பிரார் விளையாடி வருகிறார். அவர் 31.00 சராசரியில் 49 போட்டிகளில் விளையாடி 35 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 8 ஆட்டங்களில் பங்கேற்று 10 விக்கெட்களைச் சாய்த்தார். இதில் அவரது சிறந்த பந்துவீச்சு 3/22-ஆக இருந்தது.
கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக கிளென் மேக்ஸ்வெல் இருந்தார். இந்த ஆண்டு அவரது இடத்தை ஹர்பிரீத் பிரார் நிரப்புவார்.
பவர்பிளே ஓவர்களில் அவரை அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் சீசனில் அனைத்து ஆட்டங்களிலும் ஹர்பிரீத் பிராரை விளையாட வைக்க பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்யவேண்டும்.
பஞ்சாப் அணியில் யுவேந்திர சாஹல் இருந்தாலும், சாஹலை நடு ஓவர்களில் பயன்படுத்தலாம். பவர்பிளே ஓவர்களில் ஹர்பிரீத் பிராரை பயன்படுத்தும்போது அது அணிக்கு நல்ல பலனைத் தரும்.
அவருடைய திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவர் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடியபோது நான் அதைப் பார்த்திருக்கிறேன்.
ஹர்பிரீத் பிராரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக (இம்பாக்ட் பிளேயர்) களமிறக்க வேண்டும். அவரை ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வைக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.