தவெக வேட்பாளர் பட்டியலைத்தான் பையில் எடுத்து வந்து அம்மன் காலடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கிறார் – ஆனந்த்….

சென்னை:
சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவெடுத் திருக்கும் தவெக தலைவர் விஜய், வேட்பாளர் தேர்வு, அடுத்த கட்ட பிரச்சாரப் பயணம் என சுறுசுறுப்பாகி வரும் நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தனது இஷ்ட தெய்வமான மேல் மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன் தினம் அமாவாசை இரவில் வழிபாடு நடத்தினார்.

அண்மைக் காலமாகவே, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார் ஆனந்த். அதன்படி நேற்று முன் தினம் நள்ளிரவில் நடைபெற்ற பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், மஞ்சள் வேட்டி சட்டை சகிதம் வந்து தரிசனம் செய்தார் ஆனந்த்.

அப்போது, தான் கையோடு எடுத்து வந்திருந்த விஜய் படம் அச்சிடப்பட்ட ஒரு பையை, உற்சவரின் பொற்பாதத்தில் வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். அதன் பிறகு, அம்மனின் குங்கும பிரசாதத்தை நெற்றியில் இட்டு, பயபக்தியுடன் அந்தப் பையை வாங்கி, கண்ணில் ஒற்றி எடுத்துச் சென்றார்.

“அந்தப் பையில் என்ன விசேஷம்” என அங்கிருந்தவர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் புன்னகையுடன் நடையை கட்டினார் ஆனந்த். ‘தவெக வேட்பாளர் பட்டியலைத்தான் பையில் எடுத்து வந்து அம்மன் காலடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கிறார்’ என்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்னும் சிலரோ, ‘பத்திரம் போல் ஒன்று இருந்ததை நாங்கள் பார்த்தோம்’ என்று கருத்துச் சொல்லியதை அடுத்து, “ஒருவேளை, ஆனந்த் மற்றும் விஜய்யின் வேட்பு மனு படிவங்கள் அதில் இருந்திருக்கலாம்” என்றும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

அம்மன் காலடியில் வைத்து வணங்கிய பையில் என்ன இருந்தது என்பது அந்த அம்மனுக்கும் ஆனந்துக்குமே வெளிச்சம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *