வெலிங்டன்:
நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்றது.
இதில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. டோனி டி சோர்ஸி 23, ரூபின் ஹெர்மான் 28, டியான் பாரஸ்டர் 19, ஜேசன் ஸ்மித் 19, ஜார்ஜ் லிண்டே 14 ரன்கள் சேர்த்தனர்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கான எஸ்டர்ஹுய்சன் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார்.
இதில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். நியூஸிலாந்து அணி தரப்பில் கைல் ஜேமிசன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜக்காரி போல்க்ஸ், பென் சியர்ஸ், கோல் மெக்கோன்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைச் சாய்த்தனர்.
இதையடுத்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி விளையாடத் தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 18.5 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது.
நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் ராபின்சன் 32, கேட்டன் கிளார்க் 9, டேடேன் கிளியவர் 26, நிக் கெல்லி 19, பெவன் ஜேக்கப்ஸ் 3, ஜேம்ஸ் நீஷம் 6, கோல் மெக்கோன்சி 10, ஜோஷ் கிளார்க்சன் 10, ஜக்காரி போல்க்ஸ் 7, கைல் ஜேமிசன் 13, பென் சியர்ஸ் 2 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஜெரால்டு கோட்ஸி 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஓட்நீல் பார்ட்மேன், பிரனலன் சுப்ராயன், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், வியான் முல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அரை சதமடித்த கானர் எஸ்டர்ஹுய்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டி20 தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 25-ம் தேதி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.