டெஹ்ரான்:
ஈரானுக்குள் அமெரிக்க வீரர்கள் காலடி எடுத்து வைத்தால், சவப் பெட்டியில்தான் திரும்பிச் செல்வர் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை நட்பு நாடுகளுக்கு மட்டும் ஈரான் திறந்துள்ளது. இதனால் மற்ற நாடுகளுக்கு எரிபொருள் கப்பல்கள் செல்ல முடியவில்லை.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான கெடுவை அமெரிக்கா நீட்டித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாமில் இருந்து யுஎஸ்எஸ் ட்ரிபொலி போர் கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு வந்துள்ளது. இந்த கப்பலில் கடற்கரையில் வீரர்களை தரையிறக்கும் வசதி உள்ளது.
இந்த கப்பலில் 3,500 கடற்படை வீரர்கள் வந்துள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தியை திறந்துவிட ஈரான் மறுத்தால், ராணுவத்தை தரையிறக்கி ஈரானின் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ‘தி டெஹ்ரான் டைம்ஸ்’ என்ற ஈரான் தினசரி ஆங்கில பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘நரகத்துக்கு வருக’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ‘ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டியில்தான் திரும்பிச் செல்வர்’ என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.