சென்னை:
தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப்பட்டியலில் 19-வதாக இடம் பெற்றுள்ள சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களை உள்ளடக்கியது.
2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய 2 தனித்தனி தொகுதிகளை இணைத்து இத்தொகுதி உருவாக்கப்பட்டது.
இந்தியாவின் மிக நீண்ட கடற்கரையான மெரினா கடற்கரை, இந்த தொகுதியில்தான் உள்ளது.
எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம், சென்னை பல்கலைக்கழகம், எழிலகம், பார்த்தசாரதி பெருமாள் கோயில், பெரியமசூதி, பாரம்பரியமிக்க மேன்ஷன்கள், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை மற்றும் புதுப்பேட்டை வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடைகள் என தலைநகரின் முக்கிய அடையாளங்கள் இங்கு குவிந்துள்ளன.
இந்த ஆண்டு பிப். 23-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, இத்தொகுதியில் 79 ஆயிரத்து 412 ஆண்கள், 84 ஆயிரத்து 396 பெண்கள், 58 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 63,866 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதி திமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. கடந்த 1977, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் திமுகவின் ரகுமான்கான் தொடர்ந்து 3 முறை இங்கு வெற்றி பெற்றுள்ளார்.
1989-ல் திமுக சார்பில் அப்துல் லத்தீஃப் வெற்றி பெற்றார். 1991-ல் ராஜீவ்காந்தி படுகொலையை தொடர்ந்து நடந்த தேர்தலி்ல் காங்கிரஸின் ஜீனத் சர்புதீன் இத்தொகுதியை கைப்பற்றினார்.
பின்னர் 1996, 2001, 2006 ஆகிய 3 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வெற்றி வாகை சூடினார்.
2011, 2016 தேர்தல்களில் திமுகவின் ஜெ.அன்பழகன் வெற்றி பெற்றார். கடந்த 2021 தேர்தலில் திமுக இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 93,285 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
இத்தொகுதியின் பெரும்பாலான பகுதிகள் மிகக் குறுகலான தெருக்களைக் கொண்டவை.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போதிய வாகன நிறுத்த வசதி இல்லாததால், சாலைகளிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் நடைபாதைகள், சாலை ஓரங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மழைக்காலங்களில் கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் நீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் புகார்கள் எழுகின்றன.
மெரினா கடற்கரைக்கு அருகாமையில் அமைந்திருந்தாலும், தாழ்வான சில பகுதிகளில் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை பகுதிகளில் பலத்தமழையின்போது தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகவே உள்ளது.
இத்தொகுதி வழியாகச் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் நீர்நிலை கடுமையாக மாசுபட்டுள்ளது. இத்தொகுதியில் மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.
தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கு மொழி பேசும் மக்கள் மற்றும் பிராமணர்கள் கணிசமாக உள்ளனர்.
இந்த தேர்தலில் திமுக சார்பில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதிமுக-வில் ஆதி ராஜாராம், நாதக-வில் ஆயிஷா பேகம், தவெக-வில்டி.செல்வம் ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.
இருப்பினும், இங்கு திமுக, அதிமுக இடையில்தான் போட்டி நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருப்பதால், தொகுதியில் அவர் செய்துள்ள நலத்திட்டங்கள் மற்றும் ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற திட்டங்கள் அவருக்குச் சாதகமாக உள்ளன.
இந்த தொகுதி பாரம்பரியமாக திமுகவின் கோட்டையாகக் கருதப்படுவதால் திமுகவின் கட்டமைப்பு மிகவும் வலுவாக இருக்கிறது.
கணிசமாக உள்ள இஸ்லாமிய மக்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுக பக்கமே சாய வாய்ப்புள்ளதும் உதயநிதிக்கு பலம்.
ஆனாலும் கடந்த தேர்தலைப்போல அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
காரணம், அதிமுக சார்பில்களம் இறக்கப்பட்டுள்ள ஆதி ராஜாராம் 40 ஆண்டுக ளுக்கும் மேலாக சென்னை அரசியலில் இருப்பவர்.
பகுதிச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை பல பொறுப்புகளை வகித்தவர் என்பதால், அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர்.
கடந்த 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், 2021-ல் கொளத்தூர் தொகுதியிலும் மு.க.ஸ்டாலினையே நேரடியாக எதிர்த்துப் போட்டியிட்டவர்.
ஆதி ராஜாராமை இங்கு நிறுத்தியதன் மூலம் உதயநிதியைத் தனது சொந்தத் தொகுதியிலேயே முடக்கிப்போட்டு, கடைசி நேரத்தில் அவரை மாநிலம் தழுவிய பிரச்சாரத்துக்குச் செல்ல விடாமல் தடுக்க முடியும் என பழனிசாமி கருதுகிறார். இதனால் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது.
2026 பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்
ஆண்: 79,412
பெண்: 84,396
மூன்றாம் பாலினத்தவர்: 58
மொத்த வாக்காளர்கள்: 1,63,866