உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் சித்திரை பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தலுடன் தொடங்கியது.
நாளை (புதன்கிழமை) மாலை பந்தலடியில் காப்பு கட்டுதல் நடைபெற்று 27 -ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல் நடக்கிறது. அன்று உள்ளூர் வாசிகள் தாலி கட்டிக் கொள்வார்கள்.
மறுநாள் (28-ந் தேதி) சுவாமி திருக்கண் திறத்தல் நடக்கிறது. அன்று வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து வரும் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு அன்று இரவு கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
மறுநாள் (29-ந் தேதி) காலை திருத்தேர் வடம் பிடித்து பொதுமக்கள் பிரார்த்தனையை நேர்த்தி செய்வார்கள்.
அங்கிருந்து தேர் புறப்பட்டு தெய்வநாயக செட்டியார் பந்தலடியை அடைந்த பிறகு அங்கு புளி சாதம் படைத்து திருநங்கைகள் தங்கள் கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது பூசாரி கையால் வளையலை உடைத்து தாலி அனைத்தையும் அறுத்துவிட்டு அருகில் உள்ள கிணறு, குளம் ஆகிய இடங்களில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து கொண்டு அவரவர் வீட்டிற்கு செல்வார்கள்.
அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 1-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீர் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும்.