பல்லாவரம்:
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் வி.வெங்கடேசன், குரோம்பேட்டை – அஸ்தினாபுரம் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மக்கள் மற்றும் விளையாட்டுத் திடலில் பயிற்சி மேற்கொண்டவர்களிடம் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறியும் மின் கட்டணம், விலைவாசி உயர்வுக்கு காரணமான திமுக ஆட்சியின் அவலத்தையும் எடுத்துக் கூறி திமுக ஆட்சியை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலர இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.
தான் வெற்றி பெற்றவுடன் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய மக்களின் குரலாக சட்டப்பேரவையில் எதிரொலிப்பேன் என உறுதியளித்தார்.

தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று விசில் சின்னத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பல்லாவரம் வேட்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவர் பேசியதாவது: விஜய் தலைமையில் அமையும் அரசு அறிவிக்கும் திட்டங்கள், பொதுமக்களுக்கான சலுகைகளை தன்னுடைய தொகுதிக்கு உடனடியாக பெற்றுத் தருவேன். திமுக பெண்களுக்காக வழங்கிய உரிமைத் தொகையில் பாரபட்சம் பார்த்ததை போல் அல்லாமல் தொகுதியில் உள்ள அனைவரும் பயனடையும் வகையில், கட்சி பாகுபாடு இன்றி நலத்திட்டங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் பெற்றுத் தருவேன்.
தொகுதியில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து தூர்வாரப்படும். போதைப் பொருளால் இளைஞர்கள் சீரழிந்து வருவதை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் அமைக்கப்படும்.
வேலை தேடும் பட்டதாரிகளுக்கு நான்காயிரம் ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 2500 ரூபாயும் இளைஞர் நலன் நிதியாக பெற்றுத் தருவேன் எனக் கூறி விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.