சென்னை:
சென்னையிலுள்ள 16 தொகுதிகளுக்கான 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.
இதில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு மெரினாவில் உள்ள ராணிமேரி கல்லூரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த 3 மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் மத்திய ஆயுத காவல் படையினரும், 2-வது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், 3-வது அடுக்கில் சென்னை பெருநகர ஆயுதப்படையினரும், 4-வது அடுக்கில் சென்னை காவல் சட்டம் – ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த போலீஸாரும் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி முனையில் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் லயோலா கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் நேற்று முன்தினம் இரவு நேரில் சென்று பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டார். மேலும், அங்குள்ள கட்டமைப்புகளையும் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து, பாதுகாப்புப் பணியில் கவனமுடன் செயல்பட வேண்டும் என போலீஸாருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.