கொடைக்கானல்:
கொடைக்கானல் வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை நட்சத்திர ஏரியைச் சுற்றி நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அவருடன் செல்ஃபி எடுத்து சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மகிழ்ந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், கொடைக்கானலில் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் வந்தார்.
வழிநெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாகத்துடன் முதல்வரை வரவேற்றனர்.
கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பத்தினருடன் முதல்வர் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் மாலை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முதல்வரை சந்தித்துப் பேசினர்.
முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை மனைவி துர்கா மற்றும் குடும்பத் தினருடன், கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் முதல்வர் நலம் விசாரித்தார். அவருடன் பலர் கைக்குலுக்கி, ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்ந்தனர்.
ஏரிப் பகுதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் கலந்துரையாடிய முதல்வர், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
ஒரு மணி நேரம் நடைப்பயிற்சிக்குப் பிறகு முதல்வர் மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்பினார். நேற்று முழுவதும் அறையில் தங்கி ஓய்வெடுத்தார்.
அப்போது, அவரை அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, முதல்வர் உட்பட குடும்பத்தினர் அனைவரின் பெயரிலும் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது.
கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் துர்கா ஸ்டாலினுடன் செல்போனில் ‘செல்ஃபி’ எடுத்துக் கொண்டனர்.
அமைச்சர் உறுதி
இதனிடையே அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
போகர் சந்நிதி, கைலாசநாதர், ஆனந்த விநாயகர் சந்நிதியில் வழிபட்டார்.
பின்னர், கிரி வீதியில் உள்ள வன துர்க்கை அம்மன், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயில்களில் தரிசனம் செய்தார்.
அதன் பின்பு கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு ஸ்டாலின் என்ற பெயர்தான் ஆளுநர் மாளிகையில் மீண்டும் ஒலிக்கும் என்றார்.