விழுப்புரம்:
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதும், தாலியை அறுத்து விதவை கோலத்தில் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அரவானின் திருக்கண் திறத்தல் மற்றும் திருநங்கைகள் மாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கோயிலில் உள்ள அரவான் சிரசுக்கு நேற்று அதிகாலை, மாலை அணிவித்து, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயிலின் வடக்கே நிலைநிறுத்தப்பட்டிருந்த சகடையில் சுமார் 30 அடி உயரகம்பம் நட்டு, வைக்கோல் சுற்றப்பட்டது.
பின்னர், 3 கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புஜங்கள், மார்பு பதக்கம், அரசிலை, பாதம், கைகள், கயிறு, கடையாணி உள்ளிட்டவற்றை கொண்டு அரவானின் உருவம் அமைக்கப்பட்டது.
இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது திருநங்கைகள், பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர் கோயிலை சுற்றி 4 மாட வீதிகளில் வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
பின்னர் நத்தம் கிராமம் பந்தலடி எனப்படும் அழிகளத்துக்கு திருத்தேர் சென்றது. அங்கு அரவான் களப்பலி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதையடுத்து திருநங்கைகள் தாலியை அறுத்து, வெள்ளை சேலையை உடுத்தி ஒப்பாரி வைத்தனர்.
பின்னர், அரவான் உயிர்ப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு, சிரசு சிறப்பு அலங்காரத்துடன் கோயில் கொண்டு வரப்பட்டது. தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நாளை நிறைவுபெறுகிறது.