புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிடம் பெற்ற பயிற்சியே எனது ஆட்டத்தை மேம்படுத்தியது என்று இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி வீரருமான அபிஷேக் சர்மா தெரிவித்தார்.
ஜியோஸ்டார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கரோனா காலத்தில் யுவராஜ் சிங்குடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டது எனக்கு ஒரு மிகப்பெரிய தருணமாக அமைந்தது.
நான் சிறுவயது முதலே அவரை ஒரு முன்மாதிரியாகக் கருதி விளையாடி வந்தேன். அவரே எனது ஆதர்ச நாயகராகத் திகழ்ந்தார்.
ஆரம்ப காலகட்டத்தில் அவர் எனக்குச் சில வழிகாட்டுதல்களை வழங்கினார் என்றாலும், நாங்கள் ஒன்றாகச் செலவிடப் போதிய நேரம் அமையவில்லை. அதன் பிறகு பொது ஊரடங்கு காலம் வந்துவிட்டது.
அந்தச் சூழலை, குறிப்பிட்ட சில வீரர்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக கருதினேன்.
இதைத் தொடர்ந்து யுவராஜ் சிங்குடன் பயிற்சி பெற்று பேட்டிங் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன்.
யுவராஜ் சிங்கால்தான் எனது கிரிக்கெட் ஆட்டம் மேம்பட்டது. அவரிடம் பெற்ற அனுபவத்தால் தேசிய அணிக்காக அதிக அழுத்தமுள்ள போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கு மிகவும் உதவியது.
மேலும் அழுத்தம் அதிகமாக உள்ள போட்டிகளில் கவனம் செலுத்தி வெற்றி பெறுவதற்கான ஒரு வலுவான மனநிலையை வளர்த்துக்கொள்ளவும் உதவியது.
எங்கள் பயிற்சி முகாம் தொடங்கியபோது, என் நம்பிக்கையையே அடியோடு மாற்றியமைத்த ஒரு விஷயத்தை யுவராஜ் சிங் என்னிடம் தெரிவித்தார்.
இப்போது பயிற்சி பெறுவது சில உள்ளூர் போட்டிகளுக்கோ அல்லது ஐபிஎல் போட்டிகளுக்கோ அல்ல என்றும், இதுபோன்ற பயிற்சி இந்திய அணிக்காகப் பெரும் வெற்றிகளை ஈட்டித் தர உதவும் என்று யுவராஜ் சிங் அறிவுறுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆட்டங்களை வெளிப்படுத்தவும், மிக முக்கியமான தருணங்களில் பந்துவீச்சின் மூலம் வெற்றியைத் தேடித்தரவும் என்னை அவர் மனரீதியாகத் தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
கரோனா காலத்தில் யுவராஜ் சிங் கொடுத்த பயிற்சியை என்னால் மறக்கவே முடியாது. நான் இந்த அளவுக்கு கிரிக்கெட்டில் முன்னேறியிருப்பதற்கு காரணம் அவர்தான்.
என்னுடைய தந்தை ராஜ்குமார் சர்மா, பஞ்சாப் அணிக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் கிரிக்கெட் பயிற்சியாளரும் கூட. சிறுவயதிலிருந்தே அவரைப் பார்த்து வளர்ந்தேன். அப்படியே கிரிக்கெட்டும் பழகிக் கொண்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.