சென்னை:
தவெக தலைவர் ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவியது.
திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக தலைமையில் மற்றொரு அணி களம் கண்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களைப் பெறாததால், தமிழகத்தில் தற்போது ‘தொங்கு சட்டப்பேரவை’ அமையும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற தவெக எம்எல்ஏக்களை விஜய் சந்திக்கிறார்.
மேலும், கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சியமைக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த நடவடிக்கை குறித்து விஜய் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அதிமுக , விசிக , கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என சொல்லப்படுகிறது.
இதனிடையே, தற்போது அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்தி வருகிறார்கள்.