காங்கிரஸ் மூத்த தலைவர் செரியன் பிலிப், பிந்து கிருஷ்ணா கைகொடுக்க முன்வந்தபோது, அதை மறுத்து அவரை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிக்க முயற்சி: கேரள காங்கிரஸ் தலைவருக்கு குவியும் கண்டனம்!!

திருவனந்தபுரம்:
கேரள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான உற்சாகத்தில் காங்கிரஸ் தலைமையகத்திற்கு வந்த கொல்லம் தொகுதி எம்எல்ஏ பிந்து கிருஷ்ணாவிடம், அக்கட்சியின் மூத்த தலைவர் செரியன் பிலிப் அநாகரிகமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள சட்டப்பேரவை தேர்தலில் கொல்லம் தொகுதியில் இருந்து 16,830 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பிந்து கிருஷ்ணா, திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு நேற்று (மே 8) வருகை தந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த கட்சித் தலைவர்கள் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது அங்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் செரியன் பிலிப், பிந்து கிருஷ்ணா கைகொடுக்க முன்வந்தபோது, அதை மறுத்து அவரை வலுக்கட்டாயமாகக் கட்டிப்பிடிக்க முயன்றார்.

பிந்து கிருஷ்ணா தனது கைகளைத் தடுத்து விலகிச் செல்ல முயன்றபோதும், செரியன் பிலிப் அவரது தோளில் கைபோட்டு அணைக்க முயன்றார்.

இதனால் மிகுந்த அசவுகரியத்திற்கு உள்ளான பிந்து கிருஷ்ணா, உடனடியாக அவரது கைகளைத் தட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, செரியன் பிலிப்பின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“ஒரு பெண் தனது எல்லையை தெளிவாக உணர்த்திய பிறகும், ஒரு மூத்த தலைவர் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல” என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், இந்தச் சம்பவத்தின்போது அங்கிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சிலர் சிரித்துக் கொண்டிருந்தது, பெண் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் மரியாதையையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், முதல்வர் தேர்வு குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

இத்தகைய சூழலில், கட்சித் தலைமையகத்திலேயே ஒரு பெண் எம்எல்ஏ-விற்கு நேர்ந்த இந்த அவமரியாதை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை செரியன் பிலிப் அல்லது பிந்து கிருஷ்ணா தரப்பிலிருந்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *