குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் லட்சுமி நாராயணர் வழிபாடு…

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே புதூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது, லட்சுமி நாராயணர் திருக்கோவில்.

தமிழ்நாட்டில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் பெருமாள் கோவில்கள் மிகக் குறைவு. இங்கு அருள் பாலிக்கும் நாராயணர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஒரு சமயம் அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது, அதிலிருந்து மகாலட்சுமி தாயார் தோன்றினார். மகாவிஷ்ணுவை பார்த்த மகாலட்சுமி, அவரை கணவராக அடைய விரும்பினார்.

மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் வகையில், மகாவிஷ்ணு தனது இடது தொடை மீது லட்சுமியை அமர வைத்து, தாமரை மலரில் அமர்ந்து காட்சி அளித்தார். அதன் அடிப்படையிலேயே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

கி.பி.16-ம் நூற்றாண்டில் மைசூர் கர்த்தாரிய மன்னர்களால் இக்கோவில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இங்குள்ள பெருமாள், மகாலட்சுமியை தனது இடது தொடையில் அமர்த்தியபடி தாமரை மலர் மீது அமர்ந்து லட்சுமி நாராயணராக அருள்பாலிக்கிறார்.

கோவிலுக்கு முன்புள்ள ஸ்தூபியில் நவநீத கிருஷ்ணரும், அனுமனும், பெருமாளை பார்த்தவாறு காட்சி தருகிறார்கள்.

மற்றொரு பக்கம் வீர ஆஞ்சநேயர், விஜய ஆஞ்சநேயர் உள்ளனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த ஸ்தூபியை மூன்று முறை வலம் வந்து வழிபடுகிறார்கள்.

ஏழரை சனியில் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டு அதிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இங்கு பழமை வாய்ந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் (காளிங்கன் என்ற ஐந்து தலை பாம்பின் மீது நடனமாடும் கிருஷ்ணர்) சிலை காணப்படுகிறது.

அதன் அருகில் விநாயகரும் உள்ளார். எல்லா கோவில்களிலும் கருட பகவான், இறைவனை நோக்கியவாறு காட்சி தருவார்.

ஆனால் இத்தலத்தில் கருடன் லட்சுமி நாராயணரை பார்க்காமல் தெற்கு நோக்கி காணப்படுகிறார்.

இங்குள்ள லட்சுமி நாராயணரை வழிபட்டால் குடும்ப பிரச்சனைகள் தீரும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *