புதுடெல்லி:
சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை மாற்றங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சட்டவிரோத குடியேற்றம், ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் அசாதாரண மக்கள் தொகை மாற்றம், எந்தவொரு நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்குகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையின்போது, ‘மக்கள் தொகை மாற்றம் குறித்து ஆராய உயர்நிலைக் குழு’ அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவ்லேகர் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் துர்கா சங்கர் மிஸ்ரா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி வாஸ்தவா, பொருளாதார நிபுணர் டாக்டர் ஷாமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-I) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றுவார்.
இக்குழு மதம் மற்றும் சமூக அடிப்படையில் ஏற்பட்டுள்ள அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வுகளைப் பரிந்துரை செய்யும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.