சென்னை:
“தவெக அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஒரு மாதத்தில் எல்லாமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதல்வரை சந்தித்து தமிழகத்தில் சாதி வாரி கணக் கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.
இதற்கான அறிவிப்பை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
கடந்த வாரம் என் தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்புக்காக அனைத்து கட்சி மற்றும் சமுதாய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
42 தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். அதில், 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்.
99 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர் காலத்தில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வைத்துதான் இட ஒதுக்கீட்டை அரசு வழங்கி வருகிறது.
இந்த பழைய தரவுகள் போதுமானது இல்லை, இதை ஏற்க மாட்டோம் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல முறை கூறிய நிலையில், புதிதாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றினோம்.
அந்தக் கூட்டத்தின் பங்கேற்ற தலைவர்கள் சார்பில் முதல்வரை இன்று சந்தித்தேன்.
தவெக தேர்தல் அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என வாக்குறுதி அளித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக அதற்கான பணியை தொடங்க வேண்டும். மத்திய அரசு நடத்துவது தலைகளை எண்ணும் பெரிய அளவிலான கணக்கெடுப்பு.
மாநில அரசு எடுத்தால் தான் தமிழகத்தில் உள்ள இரண்டே கால் கோடி குடும்பங்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த துல்லியமான நிலையை கண்டறியலாம். பல மாநிலங்கள் இந்த கணக்கெடுப்பை எடுத்துள்ளனர்.
எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனமாக கேட்டுக்கொண்டார். நிச்சயமாக, உறுதியாக இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக நல்ல செய்தியை முதல்வர் கூறியுள்ளார்.
ஆளுநர் உரையில் இதனை கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
முதல்வரிடம் 25 நிமிடங்கள் பேசி சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்புக்கான முழு வரலாற்றையும் அவரிடம் எடுத்துரைத்தோம்.
69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. என் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தின் 99 சதவீத கட்சிகள் கலந்துகொண்டன.
தவெகவின் பிரதிநிதியும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். எனவே இந்த கணக்கெடுப்பை முதல்வர் நடத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.
பிஹாரில் இதுபோல கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 96 லட்சம் குடும்பங்களுக்கு மாத வருமானம் 6 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ 2 லட்சம் உதவி வழங்கப்பட்டது.
67 லட்சம் குடும்பங்களுக்கு வீடு இல்லை என்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பிஹாரில் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன.
அதுபோல துல்லியமான கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்தப் பட்டால் சமூக நலத்திட்டங்களை நிறைவேற்ற எளிதாக இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 700 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும்.
தவெக அரசு அமைந்து ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில், அரசின் செயல்பாடு நன்றாக உள்ளது. நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. ஊழல் பெரிய அளவில் குறைந்துள்ளது.
அரசு மாறினாலும், அதிகாரிகள் இன்னும் மாறவில்லை. அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்தில் எல்லாமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய மின் உற்பத்தி திட்டத்தை கூட திமுக அரசு கொண்டு வரவில்லை.
நிலுவையில் உள்ள 14 ஆயிரம் மெகா வாட் திட்டங்களை செயல்படுத்தவில்லை. அரசு மின் உற்பத்தி ஆலைகளில் ஒரு யூனிட் மின்சாரம் 3.50 ரூபாய்தான்.
ஆனால் தனியாரிடம் ரூ. 9 முதல் ரூ. 15 வரைக்கும் ஒரு யூனிட் மின்சாரத்தை வாங்கினர்.
தனியார் மின் உற்பத்தி ஆலைகளின் மூலம் கமிஷன் அதிகம் கிடைத்ததால், அரசின் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற விரும்பவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் 56% மின் கட்டணம் உயர்த்தப்பட்டு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மின் துறைக்கு வருமானம் வந்தும் நஷ்டத்தில் மின் வாரியம் இயங்குகிறது.
மின் துறையில் நடந்த ஊழல்கள் தான் மின் பற்றாக்குறைக்கு காரணம்.
தமிழகத்தின் உயிர் நாடி பிரச்சினையான மேகேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.
2028ல் தேர்தல் வருவதால் மேகேதாட்டு பணிகளை கர்நாடக முதல்வர் சிவக்குமார் வேகப்படுத்துவார்.
தமிழகத்தில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர்” எனத் தெரிவித்தார்.