இயக்குனர் பாரதி ராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்ட பார்த்திபன்!!

சென்னை:
தமிழ் திரையுலகில் “இயக்குநர் இமயம்” என்று போற்றப்படும் ஜாம்பவான் பாரதிராஜா (84) அவர்கள், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குனர் பாரதி ராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

பாரதிராஜா ! அரை நூற்றாண்டு சினிமா சரித்திர நாயகன்! அவரை பின் தொடர்ந்து சினிமாவிற்குள் வந்தோர் மட்டுமே இன்றைய சினிமாவில் – இன்றைய சினிமாவாக! .சினிமா என்ற சூரியனைத் தன் திசைக்குள் திருப்பிக் கொண்டவரின் அஸ்தமனத்தைக் கண்டு இன்று கண் விழித்த சூரியனின் கண்களே கடலானது!


ஏதோ வந்தார் வென்றார் சென்றார் அல்ல அவர் ! பூமியில் விதைத்து, பூவினை வளர்த்து வாசனை பறித்தவர் அல்ல அவர். புதிய நவீன யதார்த்த சினிமா பூக்க இளைய இயக்குனர்கள் இதயத்தில் ஒரு பூமியையே விதைத்தவர்.

“ஒரு பாரதிராஜாகிட்ட இருந்து பாக்யராஜ் வந்த மாதிரி, ஒரு பாக்யராஜ்கிட்ட இருந்து பார்த்திபன் வரப்போறான்”-னு எங்க டைரக்டர் என்னை அறிமுகப்படுத்தினார்.

இது எனக்கு மட்டுமல்ல 50 வருடங்களாக சினிமாவிற்குள் அறிமுகமானோர் அனைவரும் அவரின் அறிமுகமே.

நினைத்துப் பார்க்கையில் … நினைத்துப் பார்க்க இயலா சோகம் ! ஒப்பனை / கற்பனை இல்லாத உணர்ச்சிவசப்பட்ட பாராட்டு /வாழ்த்து அவருடையது. அப்பா மகனாக ஒரு பந்தம் எனக்கு மட்டுமல்ல, இன்றைய அனைத்து இயக்குனர்களோடும்.

இயக்குனர்களின் இமயமாக உயர்ந்தாலும், இதயமாக வாழ்ந்தவர். வந்தவரெல்லாம் போவர், போவோர் யாரும் வாரார்.

அவர் போல ஜீவனுள்ள ஒரு மனிதர் இனி வரவே மாட்டார் என்பதே அவர் வாழ்வின் உச்சபட்ச அத்தாட்சி.

இன்று காலை 2 மணியளவில் என் சினிமா சூரியன் மீளா உறக்கம் கண்டதாக போலீஸ் கமிஷ்னர் அலுவலகச் செய்தி என் inbox-ன் தொண்டையை அடைத்துக் கொள்ள கண் விழித்தேன். உணர்வற்றுக் கிடந்தேன்.

இச்செய்தியறியாத என் நண்பர் சிவசங்கர் 7.32-க்கு என்னை அழைத்து சமீபத்தில் தமிழக முதல்வர் விஜய் அவர்களுடன் இருக்கும் என் புகைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு “முந்திய விட இப்ப நீங்க ஆளே ஜம்முன்னு ஹீரோ மாதிரி இருக்கீங்க ,பாரதிராஜா பாத்தாருன்னா உங்கள போட்டே படம் எடுப்பாரு”என்ற சொல்ல சொல்ல அழுகை அடக்க முடியாமல் உடைந்தது.

இது சத்தியம்! இன்நேரத்தில் என் பெருமை சொல்லவா இதை எழுதுவேன்? சில நேரம் வாழ்க்கை சம்பவங்கள் சினிமாவையே மிஞ்சும் சீன் போல இருக்கும்.

இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சினிமா என்றால் அதற்கடுத்த வார்த்தை பாரதிராஜா. அல்லது சினிமாவுக்கு இணையான வார்த்தை பாரதிராஜா தான்.

அதனால் தான் சிவசங்கர் “சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதற்கு பதிலாக பாரதிராஜா வாய்ப்பளிப்பார் என்று அவரையும் அறியாமல் சொன்னார். என்ன சொல்லி என்ன? “என் இனிய தமிழ் மக்களே”

நடிகை ரேவதியின் உருக்கமான இரங்கல்: பாரதிராஜாவால் ‘மண்வாசனை’ (1983) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட முன்னணி நடிகை ரேவதி, அவரது மறைவுக்கு நேரில் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி:

“பாரதிராஜா சார் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும். நான் படங்களில் நடித்து, ஒரு நடிகையாக இந்த நிலையில் இருப்பதற்கு அவரே காரணம்.”

தனது குருவின் மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அவர் மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்….

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *