சென்னை:
நான் 6 மாதம் எதுவும் கேட்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: திறன்மிக்க அதிகாரிகளை நியமித்துவிட்டேன்.
சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன் என்று சீறிய முதல்வரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது? சவாலும், சவடாலும் விட்டவர், எப்போது அமைதி நிலையில் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி உள்ள நிலையிலும், நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் நியமனம் செய்ததாக சொன்ன திறன்மிக்க அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் முதல்வரே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளை பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி” என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பதிவில்,: “24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் எனில், உங்கள் ஆட்சியில் சராசரியாக 2 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உங்களுடன் திரையில் நடித்த நடிகர், நடிகைகளையும், உங்களை வைத்து திரைப்படம் இயக்கிய இயக்குநர்களையும் வரிசையாக சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்வதுதான் உங்கள் மாற்று அரசியலா?
பாதிக்கப்பட்டவர்களை இதுவரை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் பனையூருக்கு வந்தால் தான் உங்கள் தரிசனம் கிடைக்குமோ?” என தெரிவித்துள்ளார்.