நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஈரான் – நியூஸிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டரும் இந்திய வம்சாவளியுமான சர்ப்ரீத் சிங் தொடக்க லெவனில் இடம் பெற்று 90 நிமிடங்கள் வரை களத்தில் விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதன் மூலம் தொடக்க லெவனில் இடம் பெற்ற முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற சாதனையை படைத்தார் சர்ப்ரீத் சிங்.
ஆக்லாந்து நகரில் பஞ்சாபி பெற்றோருக்கு மகனாகப் பிறந்த 27 வயதான சர்ப்ரீத் சிங், ஈரான் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடிப்பதற்கு சில முயற்சிகளையும் மேற்கொண்டார்.
10-ம் எண் ஜெர்சியை அணிந்து விளையாடிய சர்ப்ரீத், ஈரானின் கோல் போஸ்ட்டை நோக்கி மூன்று முறை ஷாட்களை அடித்தார். 61-வது நிமிடத்தில் அவர், அடித்த ஒரு ஆபத்தான ஷாட், ஈரான் அணியின் கோல்கீப்பரால் அற்புதமாக தடுக்கப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, கனடாவின் வான்கூவர் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் துருக்கி அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி வீரரான நிஷான் வேலுப்பிள்ளை இடம் பெற்றிருந்தார்.
25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை தொடக்க லெவனில் இடம் பெறவில்லை என்றாலும், ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் மாற்று வீரராகக் களம் புகுந்து விளையாடியிருந்தார்.
மெல்பர்ன் நகரில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளையின் தாயார் ஆங்கிலோ-இந்தியர் ஆவார்.
இவரது தந்தை, இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு முன்னதாக 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய வம்சாவளி வீரராக பிரான்சின் விகாஷ் தொராசோ விளையாடியிருந்தார்.
அவர், 2 ஆட்டங்களில் பதிலி வீரராக பிரான்ஸ் அணிக்காக களம் இறங்கி விளையாடினார்.
இன்றைய ஆட்டம்:
போர்ச்சுகல் – காங்கோ நேரம்: இரவு 10:30
நாளைய ஆட்டங்கள்
இங்கிலாந்து – குரோஷியா நேரம்: அதிகாலை 1:30
கானா – பனாமா நேரம்: அதிகாலை 4:30
உஸ்பெகிஸ்தான் – கொலம்பியா நேரம்: காலை 7:30
செக்குடியரசு – தென்னாப்பிரிக்கா நேரம்: இரவு 9:30