தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நின்றால், எதிர்காலத்தில் திமுக- அதிமுக இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை – பெ.சண் முகம் விமர்சனம்

சென்னை:
தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நின்றால், எதிர்காலத்தில் திமுக – அதிமுக இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியம் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கட்சி மாறி, மாறி கூட்டணி வைப்பதும், எதிர்ப்பதும் அரசியல் சூழ்நிலையை பொறுத்தது.

தொகுதி உடன்பாடு கொள்வது இரு தரப்புக்கும் நன்மை, வெற்றி தரும் ஏற்பாடே தவிர ஒரு கட்சியின் அரசியல் முடிவில், இன்னொரு கட்சிக்கு ‘துரோகம்’ என்ற வார்த்தைக்கு இடமில்லை.

வெற்றிக்கு பலம் போதாததால் தான் கடைசி நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை திமுக தனது அணியில் சேர்த்தது. எனவே, எங்களால் நீங்கள் ஜெயித்து, உங்களால் நாங்கள் ஜெயித்தோம் என்பதே யதார்த்தம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கும், மக்களின் விருப்பத்துக்கும் ஏற்ப, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கூட்டணியை விட்டு விலகினாலே தாக்கும் திமுகவினரின் போக்கு தவறானது. உணர்ச்சி வசப்பட்டு பேசும் இத்தகைய நபர்களை திமுக தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும்.

அதேபோல் சித்தாந்த ரீதியாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும், அதிமுக வையும் சமமாக கருத முடியாது.

திராவிட கட்சிகள் தங்களது பழைய விழுமியங்களையும், கொள்கைகளையும் முழுமையாக தற்போது கடைபிடிப்பதில்லை. கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டுள்ளன.

தேர்தல் அரசியலில் வாக்கு வாங்குவதற்காக அவர்கள் சாதிய பாகுபாடுகள் மற்றும் சாதிய படுகொலைகளுக்கு எதிராக களத்தில் நின்று போராடுவதில்லை.

ஒருவேளை அமைந்திருக்கும் புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கின்ற நிலைமை வந்தால், எதிர்காலத்தில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை தாக்கியும், மாணவிகளை ஆண் காவலர்கள் தகாத முறையில் ஆடையை பிடித்து இழுத்தும், தள்ளியும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

இவை அரசியலமைப்பு சட்ட உரிமைகள் மற்றும் கண்ணியத்துக்கு எதிரானதாகும்.

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இச்செயலில் ஈடுபட்ட காவலர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *