தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது; அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு!!

மதுரை:
திமுக ஆட்சியில் நடந்ததைப் போல் தவெக ஆட்சியிலும் அனைத்து குற்றங்களும் தொடர்கின்றன என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி, மதுரை பழங்காநத்தத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பேசியது:

“திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழுத்தம் காரணமாக நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது. தனி நீதிபதி உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை.

இருப்பினும் அமல்படுத்தாமல் தடுக்கின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்த நிலை பின்பற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

இதை கடுமையாக கண்டிக்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு, திமுகவை பின்பற்றுகிறது. தவெக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

அமைச்சர் திமுகவினர் போல் நடந்துகொள்ளாமல் முதல்வர் விஜய் போல் நடந்து கொள்ள வேண்டும். முதல்வர் விஜய் டெல்லி சென்றார், பிரதமரிடம் நிதி கேட்டார், மத்திய அரசு நிதி வழங்கியது.

இதேபோல் அமைச்சர்களும் நடந்து கொள்ள வேண்டும். சாதி, மத பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவது திமுகவின் வேலை.

சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என திமுக நம்பியது. அந்த ஓட்டுகள் தவெகவுக்கு சென்றது.

திமுகவினர் புலம்பி திரிகின்றனர். அவர்களுக்கு இதுவும் வேணும், இன்னும் வேண்டும். திமுகவினர் புலம்புவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.

தவெக ஆட்சியில் இந்து சமயம் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது. சபாநாயகர் சட்டப்பேரவையில் பைபிள் படிக்கிறார்.

அவர் பகவத் கீதையையும் படிக்க வேண்டும். அப்படி நடந்தால் இது மதசார்பற்ற அரசு என நம்புவோம்.

முதல்வர் விஜய் திருச்செந்தூர், கொல்லூர் கோயில்களுக்கு செல்கிறார். தான் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என வெளியே நிலைநாட்ட நினைக்கிறார். ஆனால் நடப்பது வேறு விதமாக உள்ளது.

சிறுபான்மைத்துறை அமைச்சர் தலைமை செயலகத்தில் இஸ்லாமிய முறைப்படி பதவியேற்கிறார். இது எப்படி மதசார்பற்ற அரசாக இருக்க முடியும்.

சபாநயாகருக்கும், அமைச்சர் வன்னியரசுக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் பாராட்டு விழா நடத்துகிறார்கள். அதில் பேசியவர்கள் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.

மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார்.

இதை கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களிடம் கூற முடியுமா? இந்து மாணவர்களிடம் மட்டும் கூறுவது ஏன்? இந்து சமயத்தை அவமதிக்காதீர்கள்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கேரளாவில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று மொழிகளை படிப்பது என்ன குற்றமா? தமிழகத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறும் என நினைத்தோம்.

அறிவிப்பு வரவில்லை. மாறாக திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்காக திமுக அரசு கடன் வாங்கி வைத்து விட்டுச் சென்றதாக கூறுகின்றனர்.

தமிழகத்தில் எங்கு பார்ததாலும் போதைப் பொருள் நடமாட்டம், பெண்களுக்கு பாதுாப்பில்லாத சூழல் உள்ளது. தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது.

சிங்கப்பெண் அதிரடிப்படை தவெகவினரை கைது செய்து வருகிறது.

திமுக ஆட்சியில் என்ன நடந்தது அது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. தவெக அரசு ரீல்ஸ் அரசாக உள்ளது.

இந்து மாணவர்களுக்கும், இந்துக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும். அரசு அலுவலகங்களில் கிறிஸ்த ஊழியர்கள் நிரம்பி வழிகின்றனர்” என்று அவர் பேசினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *