சென்னை:
“சட்டப்பேரவையில் இன்றைக்கு முதல்வர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும். திட்டமிட்டு தான் இதை, அவர்கள் செய்கிறார்கள்.
இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,,” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
முதல்வர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் விஜய், வழக்கம் போல சினிமா பாணியில் தனக்கு வழங்கப்பட்ட ஸ்கிரிப்டை பேசிக் கொண்டிருந்தார்.
பின்னர், உண்மைக்கு புறம்பான செய்திகளை சட்டப்பேரவையில் பதிய வைக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களும் முதல்வரிடம் கேள்வி கேட்க எவ்வளவோ முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அவர் உங்களுக்கும் பதில் சொல்வது கிடையாது.
அதேபோல சட்டப்பேரவையில் எங்களுக்கும் பதில் சொல்வது கிடையாது.
மக்களின் கேள்வியைத் தான் நாங்கள் கேட்கிறோம். முதல்வராக அவர் மக்களின் கேள்விக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் திமுகவின் மீது பழி போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும்; இதுதான் மரபு. ஆனால் இந்த முறை மரபு மீறப்பட்டிருக்கிறது.
இது குறித்து கேள்வி எழுப்பினேன்; இதில் என்ன தவறு என கேட்கிறார்கள். அது தவறு கிடையாது; வாழ்த்துகள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை இரண்டு அல்லது மூன்று முறையோ ஒலிக்க வைக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினேன்.
இந்த விவகாரத்த்தில் ஆளுநரும், நீங்களும் என்ன சமரசம் செய்து கொண்டீர்கள் என கேள்வி எழுப்பினேன். அதற்கு எந்தவித பதிலும் கிடையாது.
ஒரு புரோட்டாகால் கூட முதல்வருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு தனி புரோட்டாகால் உள்ளது; அது ஆளுநருக்கு கிடையாது.
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 41 லட்சம் மாணவர்கள் பல சாதனை களை புரிந்துள்ளார்கள்.
அந்த திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் இஷ்டத்துக்கு ஆதாரம் இல்லாமல் முறையற்ற குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
மின்வெட்டு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மீண்டும் அவகாசம் கேட்கிறார்கள்;
அதையும் திமுக மீது பழி போட்டுவிட்டனர். எந்த விதமான கேள்வி க்கும் தெளிவான பதில் கூறவில்லை.
பயிர்க் கடன் தள்ளுபடி குறித்து கேட்டதற்கு, விவசாயிகளை திமுக தூண்டி விடுகிறது என முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக கொச்சைப் படுத்தியிருக்கிறார்.
யார் தயவுடனுடம் ஆட்சி அமைக்கவில்லை எனது முதல்வர் விஜய் சொல்கிறார்; பின்னர், அதிமுகவின் ஒரு பிரிவை மட்டும் ஏன் பார்க்கச் சென்றார்.
பீரோ புல்லிங் போல, அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய அரசு இழுத்துக் கொண்டிருக்கிறது. இதை கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை.
சினிமா ஸ்பாட்டுக்கு ஒருவர் வந்து எப்படி, டயலாக்கை மனப்பாடம் செய்துவிட்டு, நடித்துவிட்டுச் செல்வாரோ, அதே போல இன்று முதல்வர் செய்திருக்கிரார்.
சட்டப்பேரவையை சினிமா தியேட்டர் போலவே ஆக்கிவிட்டனர்; சட்டப்பேரயில் இன்றைக்கு விசில் எல்லாம் அடிக்கிறார்கள். இதெல்லாம் இந்தச் சபை பார்காதது.
இனிமேல் அமைச்சர் ஒருவர் பாடல் எல்லாம் போட்டு, ஆட ஆரம்பித்து விடுவார் என நினைக்கிறேன். சட்டப்பேரவையில் இன்றைக்கு முதல்வர் விஜய் 30 நிமிடம் பேசி இருக்கிறார். அதில் ஒரு 10 ரீல்ஸ் தேறும்.
திட்டமிட்டு தான் இதை, அவர்கள் செய்கிறார்கள். இவையெல்லாம் எதிர்பார்த்ததுதான். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
முதல்வர் செயற்கையாக பேசுகிறார்; அவர் நடிக்க ஆரம்பித்து விட்டார். சபாநாயகரிடம் ஆக்ஷன், கட் எல்லாம் கேட்பார் போல. கேரவன் கூட இனி வந்துவிடும் என நினைக்கிறேன்.
ஊழல் செய்ததாக சொன்னால் நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள்; பொத்தாம் பொதுவாக பொதுக்கூட்டம், பிரசார மேடைகளில் பேசுவது போல சட்டப்பேரவையில் பேச முடியாது.
டைக்ரக்டராக சபாநாயகர் இருக்கிறார். உதவி இயக்குநராக அமைச்சர்கள், துணை சபாநாயகர் இருக்கிறார்கள்.
நேற்று நான் பேசிமுடித்ததும் அவை முடிந்தது என சபாநாயகர் கூறினார்.
பின்னர் நாங்கள் வீட்டுக்கு சென்று டிவியை பார்த்தால் ஒரு அமைச்சர் இன்னமும் பேசிக்கொண்டிருந்தார். இப்படி காமெடி டைமாக சபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் விஜய், ‘Party fund’ என கூறுகிறார். அது எந்த பார்ட்டி என தைரியம் இருந்தால் கூறுங்கள். அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
எதையும் ஆதாரத்தோடு கூறுங்கள். நான் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினேன்; ஆனால் அதற்கு அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் இன்று அனைத்து டயலாக்கையும் ஒப்பித்திருக்கிறார்.
திமுகவின் திட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘தமிழ் புதல்வன்’, ‘புதுமைப்பெண்’ திட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை. இந்த ஆட்சி கேலிக்கூத்து ஆட்சியாக உள்ளது” இவ்வாறு அவர் தேரிவித்துள்ளார்.