முதல்வர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு சட்டப்பேரவையிலும் இருக்கிறார் – நயினார் நாகேந்திரன் தாக்கு!!

சென்னை:
“முதல்வர் விஜய் இனிமேலாவது தனது தகுதியை அறிந்து, அதற்கான சட்டப்பேரவை மரபோடு நடந்துகொள்ள வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் நிர்மல் குமார் சட்டம் படித்து இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற முடியாது என கூறினால், அரசியலமைப்பின்படி அவர் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல் அமைச்சராக கூட நீடிக்க தகுதி இல்லாத நபர்.

தவெகவைப் போல, பாஜக சாதாரண கட்சி கிடையாது. இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பாஜக தான் நாட்டை ஆளப்போகின்ற கட்சி. தவெக அடுத்த தேர்தலில் இருக்குமா, இருக்காதா எனத் தெரியவில்லை.

சட்டப்பேரவையில் அதிகமாக பேசி வருவது நமது முதல்வர்தான்; அதிகமாக பேசி பதிலுரை கொடுத்து வருகிறார். சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு கேள்விக்கு கூட முதல்வர் பதில் சொன்னது கிடையாது.

அப்படிப்பட்ட முதல்வரின் அமைச்சரவையில்தான் அமைச்சராக நிர்மல் குமார் இருக்கிறார்.

நிர்மல் குமார் பாஜகவில் இருந்தார்; அதன்பிறகு அதிமுகவுக்கு சென்றார். இப்போது தவெகவில் இருக்கிறார். அடுத்த வருடம் வேறு எந்த கட்சிக்கு செல்வார் என தெரியாது.

முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் மாளிகைக்கு எத்தனை முறை சென்றீர்கள்? நிர்மல் குமார், நீங்கள் சட்டம் படித்தவர்தானே… முதல்வரை பதவி ஏற்க விடுங்கள் என யாருக்கெல்லாம் நீங்கள் போன் செய்து சொன்னீர்கள் என்பதை நான் சொல்லட்டுமா? அப்போது மட்டும் பாஜக இனிக்கிறதா?

சட்டம் சரியாக படிக்கவில்லை; சரியாக எழுத தெரியவில்லை என்று தான் ஆளுநர் திருப்பி அனுப்பினார்.

சட்டப்பேரவையில் தேவையான விஷயங்களை மட்டும் பேசுங்கள். கடந்த ஆட்சியில் மின்வெட்டு பிரச்சினைக்கு அணில் வந்தது என சொன்னார்கள்; தற்போது குரங்கு வந்தது என்று சொல்கிறார்” என்றார்.

முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் செய்த சைகை குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “முதல்வர் விஜய் சினிமாவில் நடிப்பது போலவே நினைத்துக் கொண்டு சட்டப்பேரவையிலும் இருக்கிறார்.

சட்டமன்ற மரபுப்படி இவ்வாறு செய்கைகளை காட்டக் கூடாது; இதுபோன்று முன்பு செய்தவர்களின் நிலை என்ன ஆனது என்பதும் உங்களுக்கு தெரியும்.

இனிமேலாவது முதல்வர் தனது தகுதியை அறிந்து, அதற்கான சட்டப்பேரவை மரபோடு நடந்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *