அதிமுக முன்னாள் அமைச்சர் கள் இருவர் நாளை தவெகவில் இணைகின்றனர்!!

சென்னை/ புதுக்கோட்டை:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நாளை தவெகவில் இணைகின் றனர். இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் தவெக மற்றும் திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்தத் தோல்வி அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், உட்கட்சிப் பூசலும் வெடித்தது.

குறிப்பாக, பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் பிரிந்து தனி அணியாக உருவெடுத்தனர்.

இதற்கிடையே, அதிருப்தி அணியில் இருந்த அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி வந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மற்றொரு முக்கிய திருப்பமாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகிய இருவரும் நாளை (ஜூலை 2) மாமல்ல புரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவுள்ளனர்.

இவர்களுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களும் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதேபோல, அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சினையால், புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் பி.கே.வைரமுத்துவையும் கட்சி பதவி யில் இருந்து பொதுச் செயலாளர் பழனிசாமி நீக்கினார்.

இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களைத் திரட்டி தனது சொந்த ஊரான விராச்சிலையில் கடந்த 2 நாட்களாக ஆலோசனை மேற்கொண்டார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பி.கே.வைரமுத்து கூறியது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, நான் தோற்க வேண்டும் என்று பணியாற்றிய ஒருவரே தற்போது புதிய மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஆதரவாளர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத் தில், அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணையலாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

அதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாள ர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட 300 நிர்வாகிகளுடன், ஆயிரத்து க்கும் மேற்பட்டதொண்டர்களும் கட்சியில் இருந்து விலகி, மாற்றுக் கட்சியில் இணைய உள்ளோம். எப்போது இணைவது என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.

இதற்கிடையில், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில் அதிமுகவில் இருந்து விலகிய அறந்தாங்கி நகரச் செய லாளர் ஆதி மோகன், மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ் முன்னிலையில் 2 நாட்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தவெகவில் இணைவதை எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 43 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் நான் ஆற்றி வருகின்ற மக்கள் பணிகளும், பொதுநலத் தொண்டுகளும் நீங்கள் அறிந்ததே.

குறிப்பாக, தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக நான் பொறுப்புவகித்த போது பல்வேறு சிரமங்களில் இருந்த போக்குவரத்து துறையை இரவு பகல் பாராமல் உழைத்து, நான் இருந்த ஐந்து ஆண்டு காலம் போக்குவரத்து துறையை பொற்காலமாக மாற்ற நான் ஆற்றிய பணிகளை நீங்கள் நன்கறிவீர்கள்.

அதுமட்டும் அல்ல கரூர் மாவட்டத்திலும் கரோனா பெரும் தொற்றின் போதும், கரூர் மக்களின் இன்ப துன்பங்களிலும் நான் உடன் இருந்தவன் என்பது நீங்கள் அறிவீர்கள்

நம் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் என் பொதுவாழ்வு பயணத் தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் மாற்றத்தின் புதிய தொடக்கமாக, மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, நல்லாட்சி புரிந்துவரும் தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடர இருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான மாபெரும் இணைப்பு விழா, வருகிற வியாழக்கிழமை (02.07.2026), காலை 9.00 மணி முதல், மகாபலிபுரம் தனியார் ஓட்டல் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *