தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பின்பும் வலியுறுத்தினோம்!! தலைமை அதற்கு செவிமடுக்கவில்லை; எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடுக்கிய பழனிசாமி மீதான குற்றச்சாட்டுகள்……

மாமல்லபுரம்:
“தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்குப் பின்பும் வலியுறுத்தினோம். ஆனால், அதிமுக தலைமை அதற்கு செவிமடுக்கவில்லை” என்று தவெகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது.

இதில், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடக்க உரை நிகழ்த்திய செங்கோட்டையன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இதையடுத்து, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் தவெக கட்சித் துண்டை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், இவர்களோடு சேர்ந்து தவெகவில் இணைந்த அதிமுகவின் நிர்வாகிகள் பலருக்கும் தவெக துண்டை அணிவித்து ஆனந்த் வரவேற்றார்.

இணைப்பு விழாவில் உரையாற்றிய சி.விஜயபாஸ்கர், “புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தவெகவில் இணையும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று, தேர்தலுக்கு முன்னதாகவே நாங்கள் எங்கள் தலைமையிடம் கடுமையாக வலியுறுத்தினோம். தலைமை செவி மடுக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னரும், தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை தவெகவுக்கு வழங்கி இருக்கிறாரகள். எனவே, நாம் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கும் தலைமை செவி மடுக்கவில்லை.

எம்ஜிஆரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து, தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானித்து, அண்டை மாநிலங்களை அதிரவைத்திருக்கும் மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி நமது முதல்வர் விஜய்.

தமிழக அரசியலில் சத்தமின்றி மவுனப் புரட்சியாக மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தியவர் விஜய். தமிழக மக்களை தனது நெஞ்சிலே குடியமர்த்தி இருக்கும் ஒரு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம்.

அத்தகைய தவெக குடும்பத்தில் நாங்கள் இன்று எங்களை இணைத்துக் கொண்டுள்ளோம். தமிழக மக்களின் கனவுக்கு இன்று ஒரு பாதை கிடைத்திருக்கிறது.

எளிய மக்களின் குரலை செவி மடுக்க ஓர் இயக்கம் கிடைத்திரு க்கிறது. நம் மண்ணுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற ஒரு களம் கிடைத்திருக்கிறது. மாற்றத்தை விரும்பிய ஒவ்வொரு மனசுக்கும் ஒரு நம்பிக்கை கிடைத்திருக்கிறது.

தொண்டர்களை தோழர்களாகக் கருதும் தலைமைப் பண்புள்ள ஒரு தலைமையை நாம் பெற்றிருக்கிறோம். அதனால், இந்த இணைப்பு மகிழ்ச்சியை, மலர்ச்சியை, நம்பிக்கையை, புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

தவெக வேறு; தமிழகம் வேறு அல்ல என்ற மக்களின் தீர்ப்பை மனதில் ஏந்தி, வர இருக்கும் எல்லா தேர்தல்களிலும் இனி தவெக வெற்றி பெறும். உறுதியான அந்த ஒற்றைத் தலைமையில் நாம் பயணித்து வெற்றி வாகை சூடுவோம்.

உங்களுக்கு துணை நிற்போம், உழைப்போம். எங்கள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் இந்த நல்லாட்சி தொடர்ந்திட உழைத்திடுவோம்.

இங்கே நீங்கள் பார்ப்பது வெறும் ட்ரெயிலர்தான். மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம். தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் மாபெரும் இணைப்பு விழாவை, இன்னொரு இணைப்பு விழாவை நாங்கள் அங்கு நடத்துவோம்” என தெரிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய எம்.ஆர். விஜயபாஸ்கர், “தீய சக்தி திமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அதிமுகவை தொடங்கியவர் எம்ஜிஆர். தவெகவை உருவாக்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறார் விஜய். இது சாதாரண மாற்றம் அல்ல. இது ஒரு தலைமுறை மாற்றம்.

எடப்பாடி பழனிசாமியை நாங்கள் எல்லாம் சேர்ந்துதான் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஆக்கினோம். ஆனால், அவரது தவறான முடிவுகளால் அந்த இயக்கம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. உண்மையை எடுத்துச் சொல்பவர்களை அவர் துரோகி என்கிறார். யார் துரோகி?

42 ஆண்டுகள் அரசியலில் இருந்தவன் நான். கரூரில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவன் நான். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் இன்று தவெகவில் இணைந்திருக்கிறோம்.

ஒரு தலைவன் சரியான முடிவை எடுக்காவிட்டால், அந்த இயக்கம் எப்படி போகும் என்பதற்கு உதாரணம்தான் அதிமுகவின் இன்றைய நிலை. அடிமட்டத் தொண்டர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும்.

முதல்வர் விஜய் இன்னும் சில தினங்களில் கரூர் வர இருக்கிறார். அந்த கரூர் நிகழ்ச்சியில், இன்னும் அதிக அளவில் தொண்டர்கள் தவெகவில் இணைவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *