கோவில் என்று பொதுவாக வணங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலைத்தான் குறிக்கும்.
ஊர்ப்பெயர் தில்லை; கோவிலின் பெயர் சிதம்பரம், இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோவிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.
தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. இக்கோவிலினுள் ‘திருமூலட்டானம்’ என்னும் தனிக்கோவில் ஒன்றுள்ளது.
அர்த்தசாம வழிபாடு முடிந்தபின் எல்லாக் கோவில்களிலும் உள்ள சிவகலைகள் அனைத்தும் இந்த மூலஸ்தான லிங்கத்தில் ஒடுங்குவதாக ஐதீகம்.
திருசிற்றம்பலம் உள்ளே செல்வதற்கு ஐந்துபடிகள் (பஞ்சாக்கரப்படிகள்) உள்ளன. இப்படிகளின் இரு புறமும் யானை உருவங்கள் உள்ளன. பதினான்கு சாஸ்திரங்களில் ஒன்றை இப்படியில் வைத்தபோது, இப்படிகளிலுள்ள யானைகளில் ஒன்று தன் தும்பிக்கையால் அந்நூலையெடுத்து நடராஜப்பெருமான் திருவடியில் வைத்தமையால் அந்நூல் ‘திருக்களிற்றுப்படியார்’ என்ற பெயர் பெற்றது.
திருமால், பிரம்மன், முதலியோர் இசைக்கருவிகளை ஒலிக்கக் கூத்தபிரான் என்றும் திருநடனம் புரிகிறான்.
அம்மை சிவகாம சுந்தரி இத்திரு நடனத்தை இடைவிடாது ரசிக்கிறாள். பஞ்சபூத தலங்களுள் இது ஆகாய தலம். பஞ்ச சபைகளுள் இது கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும்.
இக்கோவிலினுள், இறைவனின் ஐந்து சபைகளாகிய 1. திருச்சிற்றம்பலம், 2. பொன்னம்பலம் (கனகசபை), 3. பேரம்பலம், 4. நிருத்தசபை, 5. ராஜசபை என ஐந்து மன்றங்கள் உள்ளன.
திருசிற்றம்பலம் நடராஜப்பெருமான் திருநடனம் புரிந்தருளும் இடம் – ‘தப்ரசபா’ எனப்படும் இவ்வம்பலத்திற்கு முதலாம் ஆதித்தசோழனின் மகன் முதற்பராந்தகசோழன் பொன்வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகளும் ‘லெய்டன்’ நகரப் பெரிய செப்பேடுகளும் கூறுகின்றன.
இவனுக்கு முன் இரண்யவர்மன், பொன்வேய்ந்தான் என்று கோவிற்புராணம் தெரிவிக்கின்றது.
பொன்னம்பலம் (கனகசபை) நடராஜப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இப்பொன்னம்பலத்தின் முகட்டை, முதலாம் ஆதித்தசோழன், கொங்குநாட்டில் இருந்து கொண்டுவந்த உயர்ந்த மாற்றுடைய பொன்னால் வேய்ந்தான் என்று சேக்கிழாரும், தில்லைக்கோவில் கல்வெட்டுப்பாடலொன்று சிறந்த சிவபக்தனும், படைத்தலைவனுமான மணவில் கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்வேய்ந்தான் என்றும் கூறுகின்றது. வியாக்ரபாதர் (புலிக்கால் சித்தர்) மிகுதியான பற்றினால் பூசித்த ஊராதலால் பூலோக கயிலாயம், எனவும் இதற்குப்பெயருண்டு. சந்தானாசாரியர்கள் முக்தி பெற்ற சிறப்புடையதுமாகிய பழம்பதி.
மாணிக்கவாசகர், புத்தரை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேசுவித்த பெரும்பதி. திருஞானசம்பந்தர் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணங்களாகக் கண்டது இப்பதியில் தான். திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தப்பதி உமாபதிசிவம் ‘கொடிக்கவி’ பாடிக் கொடியேற வைத்த அதிசய தலம்.
திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப்பட்ட தேரை ஓடச்செய்த மந்திரத்தலம்.
ராசராசன் வேண்டுதலின்பேரில் நம்பியாண்டார் நம்பிகளால் பொல்லாப்பிள்ளையாரின் துணைக்கொண்டு, திருமுறைகளை வெளிப்படுத்திய தெய்வீகத் தலம்.சேக்கிழார் பெருமானுக்குத் திருத்தொண்டர் புராணம் பாட அடியெடுத்துத்தந்து, அரங்கேற்றம் செய்யப்பட்ட அருமையான தலம். நடராஜர் சன்னிதிக்கான கொடிமரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், சங்கூதிப் பிள்ளையாருக்கு வலது புறத்தில், அர்த்தஜாம அழகர் கோவில் கொண்டுள்ளார். இரவு 10 மணி அளவில் தினமும் அர்த்தஜாம பூஜையில் ஸ்ரீ நடராஜர், பள்ளியறை தீபாராதனைகளைத் தொடர்ந்து, நிறைவாக அர்த்தஜாம அழகர் எனும் இத்திருக்கோலத்திற்கு மகா தீபாராதனையோடு அன்றைய பூஜைகள் நிறைவுறும்.
அமர்ந்த வடிவில், தூக்கிய இடது கையும், வலது கையில் கதை ஆயுதமும், பெயருக்கு ஏற்றார் போல் மிக மிக அழகிய வடிவினராக அருள்கிறார்.