புதுடெல்லி:
நாடாளுமன்ற பேரணியின்போது ஜாலியன் வாலாபாக் போன்று கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை (சிஜேபி) சேர்ந்த போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அப்போது போராட்டக்காரர்களை கலைக்க டெல்லி போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேரணியில் பங்கேற்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த விஜய் டேனியல் கூறும்போது, “சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி உடன் பேருந்தில் பயணம் செய்தேன்.
அந்த பேருந்துக்குள் போலீஸார் ஏறி எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டோம். இருபுறத்தில் இருந்தும் போலீஸார் தடியடி நடத்தினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க போராட்ட மேடைக்கு அடியில் பதுங்கினேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர் உட்பட பலரும் மேடைக்கு அடியில் பதுங்கி இருந்தனர். ஆனால் போலீஸார் எங்களை வெளியே இழுத்து தாக்குதல் நடத்தினர்.
எனக்கு கழுத்தில் பலத்த அடி விழுந்தது. ஜாலியன் வாலாபாக் போன்று மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது” என்றார்.
டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும் போது, “1919-ல் ஜாலியன்வாலா பாக்கில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல்டயரின் கொடூரத் தையே மோடி மிஞ்சிவிட்டார் என்று தோன்றுகிறது” என்றார்.
டெல்லி போலீஸ் தரப்பில் கூறும்போது, “நாடாளுமன்ற பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
சட்டவிரோதமாக கூடிய போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினோம். சுமார் 35,000 பேர் கூடுவார்கள் என்று கணித்திருந்தோம். ஆனால் அதைவிட இருமடங்கு கூட்டம் கூடியது.
சுமார் 2,000 போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளை சேர்ந்த 20 கம்பெனி வீரர்கள் மூலம் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. போலீஸ் தரப்பில் மூத்த அதிகாரிகள் உட்பட 118 பேர் காயமடைந்துள்ளனர்.
70 பேரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கை மீறியதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றனர்.