சென்னை:
ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னையில் நிறுவ உள்ளது.
இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதல்வர் விஜய் முன்னிலையில், உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உற்பத்தி திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகத்தை நிறுவுவதற்காக முன்னணி உலகளாவிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் உள்ள வழிகாட்டி நிறுவனத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சப் (Chubb) நிறுவனம், தனது உலகளாவிய திறன் மையம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த நார்டெக்ஸ் (Nordex) நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவ ற்றை தமிழ்நாட்டில் முதன்முறையாக நிறுவ முன்வந்துள்ளன. சப் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 220 பேருக்கும், நார்டெக்ஸ் நிறுவனம் அமைக்கவுள்ள மையத்தின் மூலம் 1,000 பேருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப் படுகி றது.
இவ்விரு நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் மொத்தம் 1,220 உயர்தர ஊதியம் வழங்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.
இந்த முதலீடுகள், உயர்மதிப்புடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கான முக்கிய சர்வதேச மைய மாக சென்னை நகரின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.
புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தல், அறிவுசார் திறன் சார்ந்த முதலீடுகளை ஈர்த்தல் மற் றும் திறன்மிக்க மனிதவளத்திற்கு உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல், இம்முதலீடுகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உயர்கல்வித் துறையில், ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சி சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்தி ரேலியா பல்கலைக்கழகம், இந்தியாவில் தனது வளாகத்தை சென்னை நகரில் நிறுவ உள்ளது.
இது தமிழ்நாட்டில் அமையவுள்ள முதல் சர்வதேசப் பல்கலைக்கழக வளாகமாகும். 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக் கழகம், QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-இல் 77 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
சென்னை வேளச்சேரியில் சுமார் ரூ.125 கோடி முதலீட்டில் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் 200-க்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை அமைச்சர் கடந்த ஜூன் 2026-இல் தென் கொரியா விற்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக, அந்நாட்டின் முன்னணி வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனமான மோட்டிவ்லிங்க் (MotiveLink), காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற் பூங்காவில் ரூ.300 கோடி முதலீட்டில் உற்பத்தி நிலையம் அமைப் பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்த முதலீடுகள், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு, உலகளாவிய திறன் மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர்கல்வி மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளுக்கான உலகளாவிய மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மேலும், இந்நிறுவனங்களின் முதலீடுகளை எளிதாக்குவதற்கும், அவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக அமைய தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.