சென்னை:
‘கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னரும், தவெக தலைவர் விஜய் மீது கடந்த திமுக ஆட்சியில் அவசர அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
தற்போதைய ஆட்சியில் சமூக வலைதளப் பதிவுகள், பொதுக்கூட்டப் பேச்சுகள் மற்றும் அரசியல் விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சியினரை உடனடியாக கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல’ என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தஞ்சாவூரில் நேற்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அவரது பேச்சில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை அர்த்தம் கொண்ட ஒரு கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில், அவசர அவசரமாக ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் அவரைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
நேற்றைய உரையில் எதிர்க்கட்சித் தலைவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வாசகம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், அதனைப் பெரும் குற்றமாகக் கருதி எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்யும் அளவுக்கு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அளவுக்கு மீறியதும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானதுமாகும்.
மேலும், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு அவசர வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மதியம் வரை உதயநிதி ஸ்டாலினை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தங்களுக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை எனக் கூறி காவல்துறை அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றிருப்பது மிகுந்த கவலைக்குரியது. நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய கைது நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட சட்டரீதியான கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், உச்சநீதிமன்றம் அர்னேஷ் குமார் எதிர் பிஹார் அரசு (Arnesh Kumar v. State of Bihar, 2014) வழக்கில், ஏழு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றப்பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இயந்திரத்தனமாகக் கைது செய்யக்கூடாது என்றும், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி முதலில் விசாரணை மேற்கொண்டு, கைது அவசியமானதா என்பதை காவல்துறை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது.
இத்தகைய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை அவசர அவசரமாகக் கைது செய்திருப்பது பல்வேறு சட்டரீதியான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
ஒருபுறம், எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசு, மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக உள்ளாடையுடன் கொலை செய்வேன் என கடுமையான மற்றும் ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை வெளியிட் டதாகக் கூறப்படும் விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இந்த இரட்டை நிலைப்பாடு அரசின் பாரபட்சமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்துக்குப் பின்னரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது கடந்த திமுக ஆட்சியில் அவசர அவசரமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
அரசியல் நாகரிகத்தைப் பேணிய திமுக, எதிர்க்கட்சித் தலைவர் களின் கருத்துகளுக்காக அவர்களைச் சிறையில் அடைக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை.
ஆனால், தற்போதைய ஆட்சியில் சமூக வலைதளப் பதிவுகள், பொதுக்கூட்டப் பேச்சுகள் மற்றும் அரசியல் விமர்சனங்க ளுக்கெல்லாம் எதிர்க்கட்சியினரை உடனடியாக கைது செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. இது மக்கள் நல அரசுக்கான இலக்கணமும் அல்ல.
காவிரி – மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராகத் தேவையான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டாத தமிழ்நாடு அரசு, காவிரி உரிமைக்காகக் குரல் எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்வதில் காட்டும் அவசரம், தமிழக விவசாயிகளின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.
சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்துவிட்டால், அனைத்து பிரச்சினைகளையும் எளிதில் கடந்து விடலாம் என்று தமிழ்நாடு அரசு கருதுகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்படுகிறது.
அரசியல் விமர்சனங்களையும் எதிர்க்குரல்களையும் கைது நடவடிக் கைகளால் ஒடுக்காமல், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மதித்து அரசு செயல்பட வேண்டும்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.