சுதந்திர தினவிழாவைப் போன்று சட்டப்பேரவை முதல் நாள் நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை நிச்சயம் தரப்படும்!! பேரவைத் தலைவர் அன்பழகன் உறுதி….

புதுச்சேரி:
“சுதந்திர தினவிழாவைப் போன்று சட்டப்பேரவை முதல் நாள் நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை நிச்சயம் தரப்படும். இது நமது உரிமை” என்று தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று, “புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கப் பயிற்சி நாளை நடக்கிறது.

இதில் முதல்வர் ரங்கசாமி சிறப்புரையாற்றுகிறார். நடைபெறவுள்ள சட்டப்பேரவை முதல் நாளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் கடிதம் தந்துள்ளார். எம்எல்ஏ நேரு கவன ஈர்ப்பு தீர்மானம் தந்துள்ளார்.

இதுபோன்ற தீர்மானம் அவசியமில்லாதது. இதுதொடர்பாக மத்திய அரசின் பல அரசாணைகள், சுற்றறிக்கைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தீர்மானம் போட்டு செய்யவேண்டியதில்லை.

புதுச்சேரியில் சுதந்திர தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட முதல்வர் ரங்கசாமி முன்னுரிமை தந்தார். வரும் 24-ல் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது.

அந்த சட்டப்பேரவை நிகழ்வுகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதை முதல்வர் செய்வார். இது நமது உரிமை.

இந்த உரிமைக்காக தீர்மானம் போடவேண்டியதில்லை. அமைதியாக முதல்வர் செய்து முடிப்பார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு புதுச்சேரியில் முன்னுரிமை தரப்படும்.

சுதந்திர தினவிழாவை போல் சட்டப்பேரவை முதல் நாள் நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை நிச்சயம் முதல்வரால் தரப்படும்” என்று அன்பழகன் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *