சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்தும் நீக்குபவை ரீல்ஸாக சமூகவலைதளங்களில் பரவுவதால் அதை நீக்கியும் பயனில்லாமல் போகிறது; சபாநாயகரிடம் உதயநிதி வருத்தம்!!

சென்னை:
தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்தும் நீக்குபவை ரீல்ஸாக சமூகவலைதளங்களில் பரவுவதால் அதை நீக்கியும் பயனில்லாமல் போகிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பேரவைத் தலைவரான நீங்கள், இந்த அவையை மிகவும் சிறப்பாக வழிநடத்துகிறீர்கள்.

எதிர்க்கட்சியினரான எங்களுக்கு வாய்ப்பு தந்தாலும் எங்களைவிட ஆளும் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீங்களும் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள்.

எதிர்கட்சிகளைவிட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை அதிகமாக நீங்கள்தான் அவைகுறிப்பில் இருந்து நீக்கி வரலாறு படைத்திருக்கிறீர்கள். அதற்காக எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்படுகின்றன. நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் தருகிறார்கள்.

பாட்டு பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது.

நீங்கள் இதையெல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் மூலமாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

நீங்கள் அதை நீக்குவதற்கு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

அதுபோலவே, முதல்வர் பேசுகையில் தனது மேஜையில் மூன்று கோப்புகள் இருப்பதாகச் சொன்னார். அதையும் அவர் பார்க்க வேண்டும்.

அவர் அந்த கோப்புகளை திறந்து பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட்டமாட்டோம். எதற்காக அவர் பயப்படுகிறார்.” என்றார்.

அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம்.

அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்வர் அன்று சொல்லவந்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இல்லை.

மேலும், இவர்கள் செய்யாத ரீல்ஸா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள் என்பது எல்லோரும் அறிவர்.

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக வாக்குறுதியில் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என்றார்கள். ஆனால் ஏன் செய்யவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “முதல்வர் மேஜையில் உள்ள கோப்புகளை சீக்கிரம் திறந்து பார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *