தமிழக முதல்வர் விஜய் உத்தரவை சுட்டிக்காட்டி பேசிய புதுச்சேரி தவெக எம்எல்ஏ: பேரவைத் தலைவர் பதிலடி!!

புதுச்சேரி:
“விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்த தமிழக முதல்வர் விஜய் உத்தரவை சுட்டிக்காட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ பேசியதையடுத்து புதுச்சேரி செயல்பாடு களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் செய்யச் சொல்லுங்கள்” என பேரவைத் தலைவர் அன்பழகன் குறிப்பிட்டதால் விவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணை நிலை ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று நடந்தது. அப்போது தவெக எம்எல்ஏ ராமு பேசுகையில், “விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு விவசாயக் கடனை தமிழக முதல்வர் விஜய் தள்ளுபடி செய்துள்ளார்.

புதுச்சேரியிலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வார்கள் என எதிர்பார்த்தேன்.

விவசாயிகள், மீன்பிடித் தொழில் செய்வோருக்கு உதவி தேவை. கடலுக்கு சென்று வருவோர், விவசாயிகள் பொதுமக்கள் காயமடைந்தாலோ, பாதிக்கப்பட்டாலோ அரசு மருத்துவமனைக்கு வர தாமதம் ஏற்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் தனியார் மருத்துவமனை இருக்கிறது. உடனடி சிகிச்சை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

விவசாயம் செய்ய ஆள்கிடைக்கவில்லை. விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். கடன் தள்ளுபடி தேவை,” என்றார்.

இந்நிகழ்வின்போது பேரவையில் முக்கிய அமைச்சர்கள் இல்லை.

அதையடுத்து சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், “தமிழக அரசு நல்லது செய்வதாக எம்எல்ஏ சொன்னார். எம்எல்ஏ புரிந்து கொள்ள வேண்டும்.

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,500 புதுச்சேரியில் முதல்வர் தருகிறார். அதை தமிழக முதல்வரிடம் பேசி வாங்கித் தாருங்கள்.

அட்டவணை இன குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்க முழு கல்விச் செலவை புதுச்சேரி முதல்வர் ஏற்று நிதி தருவதை தமிழக முதல்வரிடம் சொல்லுங்கள்.

இந்தியாவிலேயே பெண்கள் பத்திரப் பதிவு செய்தால் 50 சதவீதம் வரிச் சலுகை புதுச்சேரியில் செய்வதையும் தமிழகத்தில் சொல்லுங்கள்” என்றார். உடனே பேரவையில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைதட்டினர்.

அதையடுத்து தவெக எம்எல்ஏ ராமு, “நான் புதுச்சேரியில் வாழ்கிறேன்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நிறைய செய்கிறார். புதுவை விவசாயிகள், மீனவர்கள், மக்களுக்காக பேசினேன். புதுச்சேரி முதல்வர் செய்வார் என்பதால் கோரிக்கைகளை சொன்னேன்,” என்றார்.

அதற்கு பேரவைத் தலைவர் அன்பழகன், “உதாரணம் காட்டி பேசுவதால் சொன்னேன். தமிழக முதல்வர் செய்ததாகச் சொன்னதால் சொல்கிறேன். நீங்கள் சொல்லாவிட்டால் இதை சொல்லியிருக்கமாட்டேன்” என்றார்.

உடனே தவெக எம்எல்ஏ ராமு, “தமிழக முதல்வரிடம் அங்கு இருக்கும் எம்எல்ஏக்கள் பேசுவார்கள். புதுச்சேரி முதல்வர் இதையும் செய்ய வேண்டும் எனச் சொல்கிறேன்” என்றார்.

இந்நிலையில் தவெக கூட்டணி எம்எல்ஏ நேரு, “தமிழகம் அண்டை மாநிலம்.

முதல்வர் ரங்கசாமி செய்ததைப் பார்த்து அங்கும் செய்கிறார்கள்.

அண்டை மாநில முதல்வரை குறை சொல்லாமல் தேவையா னதை தமிழகத்திலிருந்து பெற வேண்டும்” என்றார் அதற்கு பேரவைத்தலைவர் அன்பழகன், “நல்லதை மட்டும் பேசுங்கள்” என்று குறிப்பிட்டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *