திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அரசு நிர்ணய கட்டணத்தை மீறி வாகனங்கள் நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு!!

மதுரை:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அரசு நிர்ணய கட்டணத்தை மீறி வாகனங்கள் நிறுத்துவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதனால் அமைச்சர் தொகுதியிலேயே கட்டணக்கொள்ளை நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த சரவணப்பொய்கை, ஜிஎஸ்டி சாலையிலுள்ள 2 இடங்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமை ஏலம் விடப்பட்டது.

வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் இரண்டு சக்கர வாகனம் ஒன்றுக்கு ரூ.10, கார் ஆட்டோ வாகனம் ஒன்றுக்கு ரூ.30, மினி பஸ், வேன் ஒன்றுக்கு ரூ.50, பஸ், லாரி ஒன்றுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

2026 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரை கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஏலம் எடுத்த ஒப்பந்த தாரர்கள், அரசு நிர்ணய கட்டணத்தை மீறி 2 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக வாகனங்களில் வரும் பக்தர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தவெக ஆட்சி அமைந்த பின்பு இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் நிகழும் கட்டணக் கொள்ளைகளை முறைப்படுத்த அமைச்சர் ரமேஷ், விலைப்பட்டியலை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்படி திருப்பரங்குன்றம் கோயிலில் வாகனங்களின் கட்டண வசூலுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதனை மூடி மறைத்துள்ள ஒப்பந்ததாரர்கள் இருமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

தவெக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஏலம் எடுத்த திமுகவைச் சேர்ந்த ஏலதாரர்கள் செயல்படுகின்றனர்.

தவெக ஆட்சியில் ஊழல், லஞ்சம், முறைகேடுகள், கட்டணக்கொள்ளைகள் தடு்க்கப்படும் என பேசும் அமைச்சர் நிர்மல்குமாரின் தொகுதியிலேயே கட்டணக் கொள்ளை அரங்கேறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *