கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தல்!! – செல்வப்பெருந்தகை…..

சென்னை:
“கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்” என மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ‘அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

அதேபோல் காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியும் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார். இந்த எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில், செல்வப்பெருந்தகை இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது. கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என ராகுல் காந்தி, கார்கே மற்றும் வேணுகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களை விட யாரும் பெரியவர்கள் இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை.

அகில இந்திய காங்கிரஸ் காட்டும் வழியில் செயல்படுபவன்தான் இந்த செல்வப்பெருந்தகை.

இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் இந்த கருத்தை பேசுவது ஏன்?, இப்படி பேசுவதை தவிரக்க வேண்டும். நான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை மதிப்பவன்; அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அரசியல் பயணத்தை தொடர்கிறோம்.

எங்களுக்கு என்ன தேவை என்பதை தாயும், தந்தையுமாக இருக்கின்ற காங்கிரஸ் தலைமையிடம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு வழி காட்டுவார்கள். எனக்கு பேச தெரியும், நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன் எனக் கூறுவதற்கு எதற்கு கூட்டணி, அது என்ன முறை, அது என்ன ஜனநாயகம்?. ஜனநாயகத்துக்கு முரணாக, அகில இந்திய காங்கிரஸுக்கு முரணாக யார் நடந்துகொண்டாலும் அது தவறுதான். இது குறித்து இன்று டெல்லியில் ஆலோசனை செய்யப்படும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *