கோவை:
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக முதல்வர் தொலை நோக்கு சிந்தனையுடன் 110-வது விதியின்கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
காவல் துறையை பொறுத்தவரை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறையாகும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு என பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.
மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், முதல்வர் விஜய் செயல்படுகிறார்.
திமுக, அதிமுக என ஒவ்வொரு கட்சியின் ஆட்சியின் போதும், தலைமை செயலகத்தை ஒவ்வொரு பக்கம் கொண்டு வர நினைத்தனர்.
புதிய தலைமை செயலகத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வது என்றாலும், காலத்தின் தேவை என்பதால் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது.
சட்டப்பேரவையில் அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை” என்று அவர் கூறினார்.
பிரதமர் வேட்பாளராக விஜய் முன் நிறுத்தப்படுகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “எங்களை பொறுத்தவரை முதல்வர் விஜய் தெளிவாக உள்ளார்.
தமிழக மக்கள் விஜய்யை நம்பி வாக்களித்துள்ளனர். 2 ஆண்டு காலத்தில் கட்சி தொடங்கி, 2 மாதத்தில் புதிய சின்னம் பெற்று, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி சாதித்துள்ளார்.
என்னை பொறுத்தவரை மக்களை காக்கும் பணிகளை முதல்வர் மேற்கொள்கிறார். மக்கள் விரும்பும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்” என்றார்.