சிவகாசி:
“மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு பாடம் புகட்டும்” என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் 118- வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில்: சில சறுக்கல், கருத்து திணிப்பு, அரசியல் கோல்மால், சமூக வலைதளங்கள் மூலமான திணிப்பு காரணமாக ஆட்சி மாற்றம் வந்துள்ளது.
இப்போது இருக்கும் ஆட்சி மக்கள் விரும்பும் ஆட்சி கிடையாது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசுக்கு பாடம் புகட்டும்.
லண்டன் பயணத்தில் முதல்வரின் செயல்பாடுகளை மக்கள் ஏற்க வில்லை. முதல்வரின் வெளிநாடு பயணத்தை மக்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்கள்.
முதல்வர் தடம் மாறி செயல்படுவதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள். விமர்சனம் வந்த பின் முதல்வர் சிலப் பணிகளை செய்வதாக தகவல் வந்துள்ளது.
முதல்வர் பதவிக்குரிய பண்பு, தகுதியில் விஜய் ஆட்சி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் அவர்களின் செயல்பாடு அதற்கு எதிர்மாறாக உள்ளது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலை தெரிவிக்காமல், முதல்வர் விஜய், அவருக்கு தெரிந்த வசனத்தை பேசி உள்ளார்.
காவல்துறை உட்பட சீருடை பணியாளர்களுக்கு எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடவில்லை. பிறரை ஏளனமாக பேசவும், தனக்குப் பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கு சட்டப்பேரவையை கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்தி கொண்டுள்ளார். சட்டப்பேரவையின் புனிதம் பாழாகி விட்டது.
தவெகவின் நிலைப்பாடு பிடிக்காததால் கம்யூனிஸ்ட்கள் தனித்துப் போட்டியிடுகின்றனர். “ஆளுநர் ஆட்சி வரக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளோம், தவெக தலைவர், கொள்கைகளை பிடித்து ஆதரவு அளிக்கவில்லை,” என கம்யூனிஸ்ட் தலைவர்களே சொல்லி விட்டனர்.
தவெக ஆட்சிக்கு உள்ள பிற கட்சிகளின் ஆதரவு நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் பேராபத்து வரலாம் என்ற சூழலில் தான் தவெக கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நிலையான ஆட்சியை மக்களுக்கு கொடுக்கும் தன்மை தவெகவுக்கு இல்லை. அது வரவேண்டும் என்றால் விஜய் தன் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவையை பிறரை இகழவும், பழிவாங்கவும், தன்னைப் புகழவும் பயன்படுத்த நினைத்தால் இதற்கு மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.