குவாஹாட்டி:
சிஆர்பிஎப் துணை ராணுவத்தின் சிறப்பு வன போர்ப்பிரிவு படைத் தலைவராக அசாமின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் பெண் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சுக்தா பராஷர் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்றவர் சஞ்சுக்தா.
இவர் அசாம் மாநிலத்தின் இரும்புப் பெண்மணி என போற்றப்படுகிறார். அசாம் மாநிலத்தில் தற்போது சிறப்பு வனப்பிரிவு போர்ப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தப் படையின் தலைவராக ஐஜி அந்தஸ்தில் இருக்கும் சஞ்சுக்தா பொறுப்பேற்றள்ளார்.
அசாமில் தீவிரவாதத் தடுப்புப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு அனைவரின் பாராட்டுகளைப் பெற்றவர் சஞ்சுக்தா.
இதைத் தொடர்ந்தே சிறப்பு வன போர்ப்பிரிவு படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சிறப்புப் பிரிவுக்கு கோப்ரா (உறுதி நடவடிக்கைகளுக்கான கமாண்டோ பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடர்ந்த காடுகளில் நீண்ட தூர தேடுதல் நடவடிக்கைகள், மறைந்திருந்து தாக்குதல், எதிர் தாக்குதல் நடவடிக்கைகள், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல், உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகள், ஆயுதமேந்திய தீவிரவாதிகளுக்கு எதிரான துல்லிய தாக்குதல்கள் உள்ளிட்ட கொரில்லா, காட்டுப் போர் முறைகளுக்காக இந்தப் பிரிவில் உள்ளவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர்.
ஐபிஎஸ் அதிகாரி சஞ்சுக்தா, ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமையில் (என்ஐஏ) டிஐஜியாக பணியாற்றிய அனுபவம் உடையவர். அசாமில் பணியாற்றியபோது, பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்திருந்தார்.
வனப்பகுதிகளில் இவர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகள், ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு எதிரான இவரது நடவடிக்கைகளால் அசாமின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்படுகிறார்.