சென்னை:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தால் கூடுதலாக 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதன் மூலம் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்.
இதற்காக பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பள்ளிகளில் சமையலறை, பாத்திரங்கள், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
புதிய உணவு வகைகள் பட்டியல் உருவாக்க சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்கலாம் என்ற விருப்பம் முதல்வருக்கு உள்ளது.
இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரமான முறையில் சிக்கன் பிரியாணி தயாரித்து வழங்குவது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். அதில் அரசு உறுதியாக உள்ளது.
ஓராசிரியர் பள்ளிகளில் மாணவர் – ஆசிரியர் விகிதத்தை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.