சென்னை:
கல்லறை திருநாளையொட்டி சென்னையில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றன. கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக சென்று இறந்த தங்கள் உறவினர்களுக்காக உருக்கத்தோடு ஜெபம் செய்தனர்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 2-ம் தேதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கிறார்கள். இந்த நாள் கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
கல்லறை திருநாளன்று, கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்த உறவினர்கள், பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் நண்பர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தப்படுத்தி, வண்ணங்கள் தீட்டி குடும்பத்தோடு சென்று ஜெபம் செய்வது வழக்கம்.
அத்தோடு இறந்த உறவினர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளை அவர்களின் நினைவாக ஏழைகளுக்கு வழங்குவர். மேலும் கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடும் நடைபெறும்.
அந்த வகையில், அனைத்து ஆன்மாக்கள் தினமான கல்லறை திருநாள் இன்று (நவ.2) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் இன்று காலை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
கத்தோலிக்க ஆலயங்களில், இறந்தோர் நினைவாக சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆலயங்களுக்கு உட்பட்ட கல்லறை தோட்டங்களுக்கு பாதிரியார்கள் சென்று இறந்தவர்களின் கல்லறைகளை புனித நீரால் தெளித்து ஆசீர்வதித்து ஜெபம் செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரேயுள்ள மிகவும் பழமையான செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டம், செயின்ட்பேட்ரிக் கல்லறை தோட்டம், கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலேண்ட் கல்லறை தோட்டம், காசிமேடு கல்லறை தோட்டம் உள்ளிட்ட கல்லறை தோட்டங்களில் இன்று காலை 6 மணி முதல் மாலை வரை ஆராதனைகள் நடைபெற்றவுள்ளதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக சென்ற வண்ணண் உள்ளனர்.
அவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்து வருகின்றனர். மெழுகுவர்த்தி ஏற்றி இறந்தோருக்காக ஜெபம் செய்து வருகின்றனர். இறந்தவர்களின் நினைவாக ஏழை எளியவர்களுக்கு உணவு பண்டங்கள், ஆடைகள் வழங்கினர்.
சென்னை புறநகர் பகுதியில் உள்ள கிறிஸ்த ஆலயங்களிலும் கல்லறை திருநாள் அனுசரிக் கப்பட்டது.
மறைமலை நகர் புனித விண்ணரசி அன்னை ஆலயம், காட்டாங்குளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், ரயில்நகர் புனித அந்தோணியார் ஆலயம், பேரமனூர் எம்டிசி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் இன்று காலை திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு கல்லறை தோட்டங்கள் மந்திரிக்கப்பட்டன.
மறைமலை நகர் விண்ணரசி அன்னை ஆலயம் மற்றும் அந்த ஆலயத்தி்ல் பங்குத்தந்தை அலெக்சீஸ் மனோகர் தலைமையில் காலையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.