சென்னை:
நாளை தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து 16 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமி்ழகத்தில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையைப் பொறுத்த வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தகப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான மாணவர்களும் தங்கி தங்கள் படிப்பைத் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி மற்றும் கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ நாட்களில் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், ஒரு நாளுக்கு முன்பாக இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்று தூத்துக்குடி, குமரி, நெல்லை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கோவை, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திட்டமிட்டனர்.
இதன் காரணமாக நேற்று காலை முதலே சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உட்பட முக்கிய ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் என பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பலர் தங்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் நவ.5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தவிர கிளாம்பாக்கம் சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் உள்ள திறந்த வெளி இடம் மற்றும் மறைமலை நகர் என 2 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கோயம்பேடு, மாதவரம் என மொத்தம் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து தினமும் 2,191 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நேற்று முன்தினம் நவ.5-ம் தேதி கூடுதலாக 1,018 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று முன்தினம் இயக்கப்பட்ட 3,209 பேருந்துகளில் மொத்தம் 1.40 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டனர்.
நேற்று சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ரயில்களிலும் பொதுமக்கள் கடந்த வியாழக்கிழமை முதல் செல்ல தொடங்கினர். வழக்கமான விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து, சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.
மேலும், விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, சென்னையில் இருந்து தென், மத்திய, மேற்கு மாவட்டங்களுக்கு புறப்பட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி வழிந்தன. நேற்று முன்தினம் ஒரு லட்சம் பேரும், நேற்று ஒன்றரை லட்சம் பேரும் பயணம் செய்தனர். கடந்த 2 நாட்களில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து உள்ளனர்.
இது தவிர தனியார் ஆம்னி பேருந்துகளில் 2 லட்சம் பேர், கார்கள், இரு சக்கர வாகனங்களில் என லட்சக்கணக்கானோர் தங்களது பயணத்தை தொடங்கினர். கடந்த 2 நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்துச் சேவைகள் வாயிலாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.