உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் மனு!!

மதுரை:
உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளான நவ. 24 அன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால், நாளைய தினம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவ.24-ல் அன்று கார்த்திகை தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி ஹிந்து தர்ம பரிஷத் அமைப்பின் நிர்வாக அறங்காவலரும், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவருமான வழக்கறிஞர் கே.கே.ரமேஷ், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அவர் தனது மனுவில், ‘கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் நவ.20 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்விஷயத்தில் தடைகளை ஏற்படுத்த அதிகாரிகள் முனையக் கூடாது. உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபிரபாவிடம் அவசர மனுவாக இது இன்று வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *