புதுச்சேரி:
விஜய் பொதுக்கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த புதுச்சேரி போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு புதுச்சேரியில் விஜய் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி கோரினார்.
சட்டம் – ஒழுங்கு காரணங் களால் புதுச்சேரி போலீஸார் அனுமதி தரவில்லை. அதே நேரத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர். அதன்படி, கடந்த 9-ம் தேதி உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்த பொதுக்கூட்டம் தொடர்பாக நேற்று முன்தினம் பேசிய புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “திறம் பட கையாண்டு, சட்டம் – ஒழுங்கு சிக்கல் இல்லாமல் இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்த காவல்துறையினருக்கு எனது பாராட்டுகள்” என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று புதுவை காவல்துறை தலைமையகத்தில் உயர திகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.
டிஜிபி ஷாலினிசிங், ஐஜி அஜித்குமார் சிங்ளா, டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பிக்கள், எஸ்பிக்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விஜய் பொதுக்கூட்டத்துக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய் எஸ்எஸ்பி ஈஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளை அமைச்சர் நமச் சிவாயம் சால்வை அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
‘க்யூ ஆர் கோடு’ நுழைவுச் சீட்டு வைத்திருந்த 5 ஆயிரம் பேரை தாண்டி பலரையும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த பொதுக்கூட்ட திடலுக்குள் அனுப்பினார். அப்போது அதை கடுமையாக கண்டித்து எஸ்எஸ்பி ஈஷாசிங் அவரிடம் பேசினார். இந்தக் காட்சிகள் வலைதளங்களில் வைரலாயின.
‘இந்த பொதுக்கூட்டத்தில் போலீஸாரின் உத்தரவை மீறி செயல்பட்ட புஸ்ஸி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “ஆதாரம் இருந் தால் தரலாம். இதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.