புதுடெல்லி:
பாஜக ஆளும் உத்தராகண்டின் முக்கிய புனிதத்தலங்களாக பத்ரிநாத், கேதார்நாத் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு ஏராளமான இந்துக்கள் வந்து வழிபடுகின்றனர்.
இவர்களுடன் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்டோரும் வருவதுண்டு. இவர்களில் இந்து அல்லாதோரும் வந்து செல்வதால் கோயில்களின் புனிதத் தன்மை பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.
இதற்காக பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களின் நிர்வாகக் கமிட்டி (பிகேடிசி) புதிய தீர்மானம் கொண்டுவர இருக்கிறது.
இதுகுறித்து பிகேடிசியின் தலைவர் ஹேமந்த் துவேதி கூறுகையில், ”இரண்டு கோயில்களின் புனிதத் தன்மையைப் பேணுவதற்காக முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இது குறித்து வரவிருக்கும் கூட்டத்தில் முறையாகத் தீர்மானம் கொண்டுவர இருக்கிறோம்.
பத்ரிநாத், கேதார்நாத்துடன் அதன் துணைக் கோயில்களிலும் இந்துக்கள் அல்லாதோர் நுழைய முழுமையாக தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என்றார்.
பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் பகுதிகளைச் சுற்றிலும் சட்டவிரோத வழிபாட்டுத் தலங்களும் உள்ளன. இவற்றை அகற்றிட உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி எடுக்கும் நடவடிக்கையை பாராட்டியும் பிகேடிசியில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
இதுகுறித்து உத்தராகண்ட் பாஜக மூத்த தலைவருமான ஹேமந்த் துவேதி கூறுகையில், “தேவபூமியான உத்தராகண்டின் மதம் மற்றும் கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பது முக்கிய கடமை.
கேதார் கண்டம் முதல் மானஸ் கண்டம் வரையிலான கோயில் சங்கிலியில் பாரம்பரியமாக இந்துக்கள் அல்லாதோர் நுழைவதற்குத் தடை இருந்தது.
ஆனால் உத்தராகண்டில் பாஜக அல்லாத அரசின் (காங்கிரஸ்) ஆட்சியில் இந்த மரபுகள் மீறப்பட்டுள்ளன. எனவே, இந்த மரபுகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுக்குரியவர்.
நாட்டின் முதல் மாநிலமாக இங்கு பொது சிவில் சட்டம் அமலாக்கம், கடுமையான கள்ளநோட்டு தடுப்புச் சட்டம் போன்ற நடவடிக்கைகளும் பாராட்டுக்குரியவை” என்றார்.